மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: கூட்டணி கட்சிகளை கழட்டி விடுகிறதா அதிமுக?

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிந்த கையேடு, உள்ளாட்சி தேர்தலையும், வெற்றிகரமாக நடத்தி முடித்து, கட்சியில் தமது தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் முதல்வர் எடப்பாடி.

அதற்கான பணிகளையும் கட்சி மட்டத்தில் முடுக்கி விட்டிருந்தார் அவர். எனினும், கூட்டணி கட்சிகள் கேட்கும், இடங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அதிமுகவுக்கு நாற்பது சதவிகித இடங்கள் கூட தேறாது என்பது தெரிந்தது.

அதிமுகவில் கிராம மட்டத்தில் உள்ள தொண்டனுக்கும், உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே பொறுப்புக்களை வழங்க முடியும். அதன்மூலமே அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில், அவர்களின் கடும் உழைப்பை பெறமுடியும்.

ஒரு வேளை, கூட்டணி கட்சிகளின் மனம் கோணாமல், ஓரளவு திருப்திகரமாக இடங்களை ஒதுக்கி அவர்களையும் வெற்றி பெற வைத்தால், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணியில் இடம் பெறுவார்களா? என்பது சந்தேகமே.

மறு புறம், எங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்று, கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் சுய தம்பட்டத்தை தொடங்கி விடுவார்கள். அது ஆளும் அதிமுகவுக்கு தர்ம சங்கடமாக இருக்கும்.

மேலும், நேரடி தேர்தல் என்று வரும்போது, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் திமுகவை சமாளிப்பது மிகவும் சிரமம். ஒருவேளை, சென்னை மாநகர மேயருக்கு உதயநிதி போட்டியிட்டால், திமுக வெற்றியை அடைய, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்.

ஆனால், கவுன்சிலர்களை மட்டும் தேர்ந்தெடுத்தால், அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது எளிது என்று முதல்வர் நினைத்துள்ளார். அதன் காரணமாகவே, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

முதல்வரின் இந்த எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

யார் யாருக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை அவரவர்கள் உள்ளாட்சி தேர்தலில், அனைத்து கட்சிகளும் பார்த்து விடுவோம். அதன் பிறகு, சட்டமன்ற தேர்தலில் கூட்டு சேருவோம் என்று வெளிப்படையாகவே கூறி இருக்கிறார் அவர்.

இதை எல்லாம் பார்க்கும்போது, கூட்டணி கட்சிகள் அனைத்தையும்  கழட்டி விட்டு விட்டு, அதிமுக தனித்து களம் காணப்போகிறதா? என்றே பலரும் கருதுகின்றனர்.