உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் தயக்கம் காட்டும் திமுக!

வரும் உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை, கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கூட்டணி கட்சிகள் கேட்கும் அளவுக்கு இடம் ஒதுக்க முடியாது என்பதன் காரணமாகவே, அதிமுக இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, அதிமுக தொண்டர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் அதிக பொறுப்புக்கள் கிடைக்க கூட்டணி கட்சிகள் இடையூறாக இருக்கும் என்றே முதல்வர் நினைக்கிறார்.

அதேபோல, திமுகவிலும், கட்சி தொண்டர்களுக்கு அதிக அளவில் உள்ளாட்சி பொறுப்புக்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக, எந்த பதவியும் இல்லாமல் இருக்கும் பல உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மூலமாகவே பொறுப்புக்கள் வழங்க முடியும்.

ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு, அதிக இடங்களை ஒதுக்கினால், அது உள்கட்சி தொண்டர்களை மிகவும் சோர்வடைய செய்யும். அது, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருதுகிறார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, முப்பது சதவிகிதம் கேட்டு, இருபது சதவிகிதத்தையாவது பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக சீட் வாங்க முயற்சிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும், திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று  எம்.பி.திருநாவுக்கரசரும் கூறி வருகின்றனர்.

கூட்டணியில் உள்ள இடது சாரி கட்சிகளும், மதிமுகவும் கோவை மற்றும் ஈரோட்டை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உதயநிதியை மேயர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியை தலித் சமூகத்திற்கு மாற்றவேண்டும் என்று திருமாவளவன் கூறி வருவது, திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விக்கிரவாண்டி தேர்தல் களத்தை, சாதீய காலமாக மாற்றியதன் காரணமாகவே, தங்கள் கூட்டணி தோற்றது என்று ஏற்கனவே திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

அத்துடன், அண்மையில் முதல்வர் பழனிசாமியை, திருமாவளவன்  சந்தித்து பேசியது உள்ளிட்ட காரணங்களால், அவர்  மீது ஸ்டாலினுக்கு அதிருப்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு சுமூகமாக இடங்களை ஒதுக்கி தரப்போகிறதா? அல்லது, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாம், சட்டமன்றத்தில் கூட்டணி பற்றி பேசிக்கொள்ளலாம் என்று சொல்லப்போகிறதா? என்று தெரியவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.