உள்ளாட்சி தேர்தல் முறை: ஜெயலலிதாவை மறந்த எடப்பாடி- கலைஞரை நிராகரித்த ஸ்டாலின்!

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம், மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில்,மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்கள் வேறு  வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால், சில சமயங்களில், மாநகர, நகர் மன்ற கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும். மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமுகமாக செயல்படும்.

அதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற இம்முறை வழிவகுக்கும். மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரைகள், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் முறையே, முன்பு நடைமுறையில் இருந்தது.

பின்னர், மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

ஆனாலும், 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கவுன்சிலர்களே, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரகளை தேர்ந்தெடுக்கும் முறையை, அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.

ஆனால், 2011 ம் ஆண்டு, இம்முறையை மாற்றி, மீண்டும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

ஆனால், ஜெயலலிதா விட்டுச்சென்ற ஆட்சியை தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பின்பற்றிய தேர்தல் முறையை மாற்றி அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.

இந்த அவசர சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மட்டுமன்றி பாஜகவும்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று பாஜகவை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 2006 –ம் ஆண்டு திமுக அரசு கடைபிடித்த மறைமுக தேர்தலை முறையை ஸ்டாலின் தற்போது ஏற்கவில்லை.

ஆக உள்ளாட்சி தேர்தலில் கலைஞரின் தேர்தல் முறையை ஸ்டாலினும், ஜெயலலிதாவின் தேர்தல் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கவில்லை என்பதே உண்மை.