திராவிட கட்சிகள் vs சினிமா நடிகர்கள்:  2021 சட்டமன்ற தேர்தல்!

சினிமா துறையை சேர்ந்த ஐந்து பேர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். திக்கற்ற பார்வதி என்ற படத்தின் கதாசிரியர் என்ற முறையில் ராஜாஜியும் சினிமா துறையை சேர்ந்தவர் ஆகிறார்.

அதற்குப்பின், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமா துறையை சேர்ந்த நான்கு பேர் தொடர்ந்து தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளனர்.

அதனால், தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமா என்பது இரண்டறக் கலந்து விட்டது.

கலைஞர் என்ற திரை ஆளுமைதான், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் தலைவராக இருந்தார்.

அதேபோல், திரை ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவே, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிமுகவின் பொது செயலாளராக இருந்தார்.

தற்போது கலைஞர், ஜெயலலிதா போன்ற  திரை மற்றும் அரசியல் ஆளுமைகள், திமுக மற்றும் அதிமுகவில் இல்லை.

அதனால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று திரையுலக ஆளுமைகளான ரஜினியும் கமலும் அழுத்தமாக கூறி வருகின்றனர்.

இந்த கருத்து, திமுக மற்றும் அதிமுக தலைமைக்கு அதிருப்தியாகவே உள்ளது. சில தலைவர்கள் நேரடியாகவே இதற்கு பதில் சொல்கின்றனர். சிலர், மற்றவர்கள் மூலம் இதற்கு பதில் சொல்கின்றனர்.

வெற்றிடம் என்ற வார்த்தையில் தொடங்கிய “நடிகர்கள் vs அரசியல்வாதி” களின் வாக்குவாதம், தற்போது, அதிசயம் அற்புதம் என்ற அளவில் வந்து நிற்கிறது.

சரியோ தவறோ? கமலஹாசன் கட்சியை ஆரம்பித்து, தேர்தலிலும் பங்கேற்று விட்டார். ஆனால், ரஜினி பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருந்தாலும், இதுவரை கட்சி ஆரம்பிக்கவும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை.

இந்நிலையில், கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை, கொஞ்சம் அடக்கியே வாசித்த, ரஜினியும் கமலும் தற்போது, வெளிப்படையாகவே, கருத்துக்களை கூற ஆரம்பித்து விட்டனர்.

இது தற்போது உள்ள திமுக மற்றும் அதிமுக தலைமையை கொதிக்க வைக்கிறது. அதனால், உடனுக்குடன் சூடான பதிலடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதன் மற்றொரு பரிணாம வளர்ச்சியாக, தனித்தனியாக இயங்கி வந்த ரஜினியும் கமலும், தேவைப்பட்டால் மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட தயார் என்று நேற்று அறிவித்து விட்டனர்.

இது, முதல்வர் கனவில் இருக்கும் பலருக்கும் கூடுதல் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்து விட்டது. கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட்டால், திரையுலகமே திரண்டு பின்னால் வரும் என்று இயக்குனர் சந்திரசேகர் கூறினார்.

ரஜினி, கமல், விஜய் என அனைவரும் அணிதிரண்டு வந்தாலும், அதிமுகவை அசைக்க முடியாது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதும், இந்த கோபத்தின் வெளிப்பாடுதான்.

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், நடிகர்களுக்கு எதிராக காரசாரமாக பேசி, தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார்.

எடப்பாடியையும் ஸ்டாலினையும் எதிர்த்து, அரசியல் செய்வதன்மூலம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று, ரஜினி, கமல் உள்ளிட்ட திரை உலகம் நினைக்கிறது.

எனவே அடுத்த சட்டமன்ற தேர்தல் என்பது திராவிட கட்சிகள் vs சினிமா நடிகர்கள் என்ற இரு தரப்புக்கு இடையேதான் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.