இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார் என இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இவர் தனது பதவியை முறைப்படி வியாயழனன்று  ராஜினாமா செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு வர உள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவி ஏற்றார்.

இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமராக இருந்து வரும் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.

வரும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவிக்காலம் இருந்தபோதிலும் அவர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதுகுறித்து விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடாளுமன்றத்தில் எனக்கு இன்னும் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், தேர்தல் தோல்வியால்,  மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கடித்ததை முறைப்படி வியாழனன்று அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் விக்ரமசிங்கே வழங்க உள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை பிரதமர் ராஜினாமா செய்வதாக அறிவித்த உடனேயே அவரின் அமைச்சரவையும் அதிகாரத்தை இழந்துவிடும். அனைத்து அமைச்சர்களும் தங்களின் பதவியை இழந்துவிடுவார்கள்.

தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றவுடனேயே அமைச்சர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் வரை அதிபர் கோத்தபய ராஜபக்ச,  தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க உள்ளார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, மகிந்த ராஜபக்ச அக்டோபர் 26-ம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார்.

அப்போது அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தது சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.