1,000  ஏக்கர் நிலத்தை  திமுகவுக்கே தருகிறேன்: மருத்துவர் ராமதாஸ் பதிலடி!

ஆளும் கட்சியை டென்ஷன் படுத்தி திக்கு முக்காட வைப்பது, வழக்கமாக எதிர் கட்சிகள் செய்யும் வேலை. ஆனால், மிசா கைது மற்றும் பஞ்சமி நில விவகாரத்திலும், எதிர் கட்சியான திமுகவை டென்ஷன் படுத்தியது ஆளும் கட்சியான அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான பாமகவும்தான்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக, பாமக நிறுவனர் கூறிய குற்றச்சாட்டு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை வரை வந்து விட்டது.

அதன்படி, ஆணையத்தில் ஆஜரான, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முரசொலி தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. பொய்யாக வழக்கு தொடுத்தவர் மீது அவதூறு வழக்கு ஹோடுக்கப்படும்.

இதை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்தும் தெரிவிப்போம் என்றார்.

இதற்கு, தமது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை, அதன் நிர்வாகம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை.

மாறாக, ஆணையத்திற்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைதான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து, மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அதுதான் அறம், அதுதான் நேர்மை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முரசொலி விவகாரத்தில், குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க முடியாத திமுக, அந்த சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளது.

அந்த சவாலை நான் ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால், அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.

இந்த சவாலை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.