முதல் காட்சியில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியில் கைக்கு எட்டுவதல்ல முதல்வர் நாற்காலி: ரஜினிக்கு நமது அம்மா பதில்!

 அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி அளிக்க வேண்டிய பதில்கள், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், கவிதை நடையிலோ அல்லது சிறப்புக் கட்டுரை வடிவிலோ வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், நடிகர் கமல் விழாவில், தாம் முதல்வராவோம் என்று, எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று பேசிய நடிகர் ரஜினிக்கு, நமது அம்மா நாளேட்டின் மூலம் பதில் தந்துள்ளார் முதல்வர்.

சென்னையில் நடைபெற்ற கமல்-60  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினி, `எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராவார் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார்.

அவருடைய ஆட்சி இருபது நாள் தாங்காது, ஒரு மாதம் தாங்காது,  நான்கு ஐந்து மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று சொல்லாத ஆளே இல்லை. அதிசயம் நடந்தது,  அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை.

நேற்றும் அதிசயம்,  அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு, அ.தி.மு.கவின் அதிகாரபூர்வமான நாளேடான  நமது அம்மா’ பதிலடி கொடுத்துள்ளது. ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியாரும்…சூசக ஆருடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும்… என்ற தலைப்பில் குத்தீட்டி என்ற பெயரில் அந்த செய்தி வெளியாகி உள்ளது.

அதில், எடப்பாடியார் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால் இன்று வரை சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும் என ரஜினிகாந்த், கமல் பிறந்தநாள் விழாவில் பேசியிருக்கிறார்.

ஆக, வினா குறிப்புகளை வியப்புக் குறிகளாக மாற்றி கேள்விகளையும், கேலிகளையும் ஆச்சர்யங்களாக்கி எடப்பாடி நடத்துகிற நல்லாட்சி 2021-ம் ஆண்டும் தொடரும் என்பதைத்தான், நாளைக்கும் நடக்கப்போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கிறார் போலும்.

மொத்தத்தில், முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் காட்சியில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டிவிடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதனை கமல்ஹாசனுக்கு, மறைமுகமாக ரஜினி சுட்டிக்காட்டியிருக்கும் அறிவுரையாகவே இக்கருத்து தோன்றுகிறது.

கூடவே, “தான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்படியார் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்” என்றும் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

உண்மைதான் உச்ச நட்சத்திரமே. கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்களும் கன்னித்தமிழ் பூமியின் சூப்பர் ஸ்டாராவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள்.

ஆனாலும் காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள்தான் தலைவர்களாக, அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

அப்படித்தான்  எங்கள் எடப்பாடியாரும் படிப்படியாய் உழைத்து  தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத  விசுவாசத்தை பதித்து  சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக, அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து  ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும்,  தூய தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என நிரூபித்து இருக்கிறார்.

இது, ஒரு சினிமாவில் நடித்து விட்டு, மறு சினிமா வாய்ப்பு வருவதற்குள் முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் என்பதை உணர்த்துகிறது வரலாறு.

இதனை இலைமறை காயாக சுட்டி  காட்டியிருக்கிறது உங்கள் பேச்சு அப்படித்தானே. எப்படியாயினும் மாற்றாரும் போற்றும் சாதனை சரித்திரத்தை கழகம் நாளையும் படைக்கும். நீங்கள் சுட்டி காட்டுகிற அதிசயம் இதுதான் என்பதை கல்வெட்டு சாட்சியாய் உரைக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.