முதல்வருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: தமிழக அரசியல் பரபரப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் தோல். திருமாவளவன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொல்.திருமாவளவன் தலைமையிலான விசிக, கடந்த மக்களவை தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி அறிவித்தது.

எனினும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின், வன்னியர் பிரச்சினையை கையில் எடுத்ததால், தேர்தல் களம் சாதீய காலமாக மாறிவிட்டது என்று கூறி இருந்தார்.

இது, திமுகவினருக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதனால், விசிக, திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் என்று பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பஞ்சமி நில விவகாரத்திலும், திருமாவளவன் தெரிவித்த கருத்து, திமுகவுக்கு சாதகமாக இல்லை. பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமித்தாலும், அகற்றப்பட வேண்டியதுதான் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அதைதொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினை, தோல்.திருமாவளவன் சந்தித்து பேசி, உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்ததால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திருமாவளவன், முதல்வர் எடப்பாடியை நேற்று நேற்று திடீரென சந்தித்து பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், உள்ளாட்சி தேர்தல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான சில கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்தித்ததாக கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் போன்ற அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் தெரிவித்தார்.

எனினும், முதல்வருடனான திருமாவளவனின் சந்திப்பில், அரசியல் ரீதியான சில நோக்கங்கள் இருக்கும் என்றே கூறப்படுகிறது.