எடப்பாடியை பற்றி ரஜினி சொன்ன “அதிசயம் – அற்புதம்” என்பதன் பொருள் என்ன? அதிமுக அமைச்சர்கள் பொங்குவது ஏன்?

கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத தமிழகத்தில் ரஜினியும், கமலும் எதை சொன்னாலும், அதிமுகவும், திமுகவும் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளன.

தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது என்று அண்மையில் சொன்ன ரஜினிக்கு எதிராக, திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் தரப்பிலும் இருந்து பதிலடி கிடைத்தது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘கமல் 60’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழக முதல்வராவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறினார்.

அவர் முதல்வரானவுடன், ஆட்சி இருபது  நாட்கள் கூட தாங்காது. ஒரு  மாதம் தாங்காது.  ஐந்து  மாதம் தான் கவிழ்ந்துவிடும் என்று தொன்னூற்றொன்பது சதவிகிதம்  பேர் சொன்னார்கள்.

அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும் என்றும் கூறினார்.

அவர் எடப்பாடியை புகழ்ந்து பேசுகிறாரா? அல்லது வஞ்சகமாக புகழ்ந்து பேசுகிறாரா? என்று புரியவில்லை. கமலோடு தொடர்புடைய மேடை என்பதால், கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் பேசி இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக, ரஜினியையும், கமலையும் நேரடியாகவே விமர்சித்து வரும் முதல்வர் எடப்பாடியை, நிச்சயமாக ரஜினி புகழ்ந்து பேச வாய்ப்பே இல்லை.

அடுத்து, நேற்று, இன்று, நாளை என்று முக்காலங்களையும் உணர்த்தி, அதிசயம், அற்புதம் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பதில்தான், விஷயமே இருக்கிறது.

கனவில் கூட எடப்பாடியே, நினைத்துப் பார்க்க முடியாத முதல்வர் பதவி நேற்று அதிசயம், அற்புதம்.

அவருடைய ஆட்சி சில நாட்களில், சில வாரங்களில், சில மாதங்களில் கலைந்து விடும் என்ற கணிப்பை மீறி, இன்று வரை தொடர்வது அதிசயம் அற்புதம்.

நாளை இதே பதவியில் நான் கூட இருக்கலாம் என்பதும் அதிசயம் அற்புதம்.. என்பதைத்தான் ரஜினி அப்படி குறிப்பிட்டுள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்படி வஞ்சகப்புகழ்ச்சி அணியில் ரஜினி பேசி இருப்பதால்தான், அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் ரஜினிக்கு எதிராக பொங்கி பொங்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் பேச்சுக்கு, அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலைதான் முதல் பதிலடி கொடுத்திருந்தார். அவருக்கு பின் ஒருவர் பின் ஒருவராக பதில் கொடுத்து வருகின்றனர்.

செம்மலை கூறும்போது, ரஜினி நினைக்கும் அதிசயம் நிச்சயம் நடக்காது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆனார் என்றால், அதிமுக என்ற அடித்தளம் இருந்தது. ஆசைப்படும் எல்லாவற்றையும் அடைய முடியாது. சினிமாவில் ‘டூப்’ போடலாம். அரசியலில் ‘டூப்’ போட முடியாது.

இப்படி பேசும் ரஜினி, கமல் போன்றவர்கள், அரசியல், ஆளுமை, தலைமைப்பண்பு என்றால் என்ன என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒரு கட்சி தேர்ந்தெடுக்கும் எம்எல்ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர்.

முதல்வர், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.

இதேபோல், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், ஒ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.