வீரபாண்டியார் வாழ்க்கை வரலாற்று நூலில் முக்கிய தகவல்கள் நீக்கம்: திமுகவை சாடும் மருத்துவர் ராமதாஸ்!

சேலம் மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இறுதி வரை  விளங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வீரபாண்டியார் மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில், அவர் எழுதிய “திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற நூல், நேற்று முன்தினம் சேலத்தில், திமுக தலைவர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சிங்கத்தின் வரலாறு சிதைக்கப்பட்ட வரலாறாக இந்நூலில் வெளிவந்துள்ளது என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறி இருப்பதன் முக்கிய அம்சங்கள்:-

 7 ஆண்டுகளுக்கு முன் சிங்கத்தின் சீற்றத்துடன் எழுதப்பட்டிருந்த அந்த நூல், இப்போது வீரபாண்டியாரின் அடையாளங்கள் எதுவும் இல்லாத மிகச் சாதாரண நூலாக வெளியிடப்பட்டிருப்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

வீரபாண்டியாருக்கு, நூல் எழுத வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்படுவதற்கு காரணமே 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தான்.

அந்த கூட்டத்தில், கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது’’ என்று ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

அங்கு நடந்த அநாகரிகமான நிகழ்வுகளைக் கண்டு கலைஞர் கண்ணீர் வடித்தார். அதுமட்டுமின்றி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கண்டித்த அவர், பேச மறுத்து விட்டார்.

அப்போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தான், அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய வீரபாண்டியார், தமது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார்.

நூலின் பெரும்பகுதியை பெங்களூருவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி தான் வீரபாண்டியார் எழுதினார். பல அத்தியாயங்கள் பெங்களூருவில் தான் எழுதப்பட்டன.

ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் தான் பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் எழுதப்பட்டன. அவரது உதவியாளர்களில் ஒருவர் தான் இதற்கு உதவியாக இருந்தார்.

1957- ஆம் ஆண்டில் திமுகவுக்கு வந்த வீரபாண்டியார் அடுத்த 5 ஆண்டுகளில் திமுக சந்தித்த இரண்டாவது பொதுத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின் அடுத்தடுத்து 1967, 1971 ஆகிய தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

அந்த 3 தேர்தல்களிலும் வீரபாண்டி தொகுதியில் பதிவான வாக்குகளில் மூன்றில் இரு பங்கு வாக்குகளை ஆறுமுகம் தான் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இவரை நெருங்கிக் கூட வர முடியவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார் உருவெடுத்தார்.

1977-ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டால், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஆறுமுகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன்பின் அவரது வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினாராம்.

அதனால் 1977-ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்க கலைஞர் மறுத்துவிட்டாராம். அதுபற்றி வீரபாண்டியார் ஆவேசமாக கேட்டதற்கு, உனக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம். வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்தத் தேர்தலில் திமுக தோற்றது.

1978- ஆம் ஆண்டில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை. கலைஞரை அவர் நேரில் சந்தித்து முறையிட்டாராம். அப்போது, ஏதேதோ கூறிய கலைஞர், இப்போது முடியாது; அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியார், கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டாராம்; அதன்பிறகு தான் கலைஞர் வீரபாண்டியாருக்கும் வேண்டா வெறுப்பாக வாய்ப்பளித்தாராம்.

தமது அரசியல் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது வீரபாண்டியாரின் வருத்தம் ஆகும்.

வேறு சில தருணங்களிலும் கலைஞர் தம்மை கைவிட்டதாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அந்த வருத்தங்களையெல்லாம் தமது வாழ்க்கை வரலாற்று நூலின் ஓர் அத்தியாயமாக பதிவு செய்திருந்தார் வீரபாண்டியார்.

இந்த தகவல்களை ஒரு கட்டத்தில் என்னிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். வீரபாண்டியார் உயிருடன் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலை இடம் வெளியிட்டு இருந்தால், இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும்.

ஆனால், இப்போது இந்த தகவல்கள் அடங்கிய அத்தியாயமே புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் தமக்கு கீழ் பணி செய்த ஒருவர் துரோகம் செய்ததால் அவரை வீரபாண்டியார் விரட்டியடித்துள்ளார்.

அப்படிப்பட்டவரையே தமக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்ய வைத்து ஸ்டாலின் அவமதித்தார் என்ற தமது வருத்தத்தையும் அந்த நூலில் வீரபாண்டியார் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அந்த பகுதியும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நூலில் இல்லை.

2012-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாக பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுயசரிதை புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்து விட்டார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்த நூலை வெளியிடுவதற்காக முயற்சிகளில் அவரது மகன் வீரபாண்டி ராஜா முயன்றார். ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்த திமுக தலைமை அந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது.

இதுகுறித்து மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போதே நான் குற்றஞ்சாட்டியிருக்கிறேன்.

இப்போதும் வீரபாண்டியார் மீதான அன்பு காரணமாக இந்த நூல் வெளியிடப்படவில்லை. அந்த நூலின் மூலப்பிரதி கடந்த 7 ஆண்டுகளாக வீரபாண்டியாரின் உதவியாளரான செங்கோட்டையன் என்பவர் வீட்டில் தான் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இப்போது வேறு சில நெருக்கடிகள் காரணமாகத் தான், திமுக தலைமை மீதான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு, இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

வீரபாண்டியார் எழுதிய கருத்துகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தால் இந்த நூல் சிங்கத்தின் வரலாறாக இருந்திருக்கும். ஆனால், அந்த நூலில் இருந்த பல முக்கிய கருத்துகள் இப்போது சிதைக்கப் பட்டு இருக்கின்றன. இதனால் அந்த நூல் அதற்குரிய மதிப்பை இழந்து விட்டது என்பதே உண்மை.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறி இருக்கிறார்.