எடப்பாடி பற்றிய ரஜினியின் கருத்து: திமுக கூட்டணி கட்சியான கொ.ம.தே.கவும் கண்டனம்!

கமலஹாசன் விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த், முதல்வர் எடப்பாடி பற்றி கூறிய கருத்துக்கு, அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதே சமயம், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கொங்கு மக்கள் தேசிய கட்சியும், எடப்பாடி பற்றிய ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற கொங்கு தேச மக்கள் கட்சி, நாமக்கல் தொகுதியில், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி அதிசயம் நடந்து முதல்வரானதைப்போல, தானும் முதல்வர் ஆவேன் என்ற ரஜினியின் கருத்து, அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே,, தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு, நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது.

முதலமைச்சர் எடப்பாடி, திடீரென்று கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அதிமுகவில் அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புக்களை வகித்து, ஜெயலலிதாவுக்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக்கொள்ள கூடாது என்றார்.

சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டு பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர்.

நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக்கொண்டு, ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால், தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார் என்றும் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்று கூறிய பின்னர், முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசியது, திமுக கூட்டணியில் சில சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது, திமுக கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான கொ.ம.தே.க, எடப்பாடிக்காக, ரஜினியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.