அரசியலுக்கும் வர வேண்டும் – இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்: எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்வது என்ன?

சென்னையில் நடந்த கமல்-60  விழாவில், முதல்வர் எடப்பாடி பற்றி ரஜினி பேசிய பேச்சு, அந்த விழா மேலும் பிரபலம் அடைய உதவியதுடன், அதிமுக அமைச்சர்கள் பலரையும் பதில் சொல்ல வைத்து விட்டது.

ஆனால் அதே மேடையில், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசிய பேச்சும் பல யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய், அரசியலில் இறங்குவதற்கான அனைத்து வேலைகளையும் பின்னால் இருந்து செய்துகொண்டு இருப்பவர், அவரது தந்தை சந்திரசேகர்.

விஜய் ரசிகர் மன்றங்களை எல்லாம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சரியான அரசியல் தருனத்திற்கான எதிர்பார்ப்புடன் இருக்கிறார் அவர்.

இந்நிலையில், கமல் விழாவில் பேசிய அவர், ரஜினியும் கமழும் சேர்ந்து அரசியல் செய்தால், கலையுலகமே திரண்டு பின்னால் வரும் என்றார்.

அனைத்து தரப்பினரும் அரசியலுக்கு வரும்போது, நடிகர்கள் அரசியலுக்கு ஏன் வருகிறார்கள் என்று கேட்கிறார்கள். இது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள்தானே?

ரஜினியிடம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர் இன்னும் வரவில்லை. ஆனால் கமல் துணிச்சலுடன் அரசியலில் இறங்கிவிட்டார்.

அதேபோல, ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என்று இப்போதும் கேட்டுக்கொள்கிறேன். நான் மட்டுமில்லை, கோடானுகோடி ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள்.

இதேபோல் ரஜினியும் வரவேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால், தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது. இருவரும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்கிற என் ஆசையை, இந்த மேடையில் பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன்.

கமலும் ரஜினியும் கலையுலகின் மூத்த பிள்ளைகள். நீங்கள் இருவரும் இணைந்து அரசியலுக்கு வரும்போது, உங்கள் பின்னால் கலையுலகமே இருக்கும் என்று நம்புகிறேன். இளைஞர்கள் உங்களின் பின்னால் வருவார்கள் என்பது உறுதி என்றார்.

இடையே, ஆண்ட பின்னர் அண்ணன்கள் தம்பிமார்களுக்கு வழிவிட வேண்டும் என்று அவர் பேசிய பேச்சு, தமது மகன் விஜயை மையப்படுத்திதான் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்தனர்.

அந்த வகையில், இயக்குனர் சந்திரசேகர் பேசிய பேச்சும் கமல் விழாவில் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.