இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு: தமிழர்களின் நிலை என்ன?

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் 54  சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். அவரை  எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 43  சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் ஒருகோடியே 20 லட்சம் பேர் வாக்களித்த நிலையில் அதில் 60 லட்சம் வாக்குகளை கோத்தபாய ராஜபக்ச பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சிங்களர்கள் வசிக்கும் தெற்கு மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அதிக அளவிலான வாக்குகள் கோத்தபயவுக்கு கிடைத்தன.

ஆனால், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து 90 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தப் பகுதியில் கோத்தபயவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரை முன்நின்று நடத்தியவர் கோத்தபய ராஜபக்ச என்பதால், அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய சூழலில், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறி இருக்கிறார்.

சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கொத்தபய ராஜபக்சே கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் வைகோ கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ அதிகாரியான கோத்தபய ராஜபக்சே அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், கோத்தபய மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் பின்னணியில் கோத்தபய ராஜபகேசே இருப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

கோத்தபய ஆட்சிக்கு வருவதால் சீனாவுடனான இலங்கை உறவுகள் மேலும் வலுப்படும். இது இந்தியாவுக்கு எதிரானதாகவும் இருக்கும் என்றே கூறப்படுகிறது.