கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தல்:  35 இடங்களில் 30 தமிழர்கள் வெற்றி!

கோலார் தங்கவயல் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 35 இடங்களில் 30 இடங்களை தமிழர்கள் வெற்றி கைப்பற்றி உள்ளனர்.

அதிகபட்சமாக 13 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் நகராட்சியில் உள்ள 35 வார்டுகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் காங்கிரஸ் 13  இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 3 இடங்களையும், மத சார்பற்ற ஜனதாதளம், இந்திய குடியரசு கட்சி ஆகியவை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில், சுயேச்சை வேட்பாளர்கள் 14  இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள  35 இடங்களில், கட்சிகள் மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட தமிழர்கள் 30 பேர் வெற்றிபெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு, கோலார் தங்கவயல் நகராட்சியில் அதிக அளவில் தமிழர்கள் வெற்றி பெற்றிருப்பது, கர்நாடக தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தங்கவயல் நகராட்சியில் பெரும்பான்மைக்கு 18 இடங்கள் தேவை. இதனால் 13  இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்ற முயன்று வருகிறது.