சிதம்பரம் கோவிலில் தொடரும் சர்ச்சை: அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னிதிக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தீட்சிதர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவற்றின் மனைவி லதா. இவர்,  ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர், தமது மகன் ராஜேஷின்  பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலை அவரது பெயரில் அர்ச்சனை செய்வதற்காக முக்குறுணி விநாயகர் சன்னிதிக்குச் சென்றுள்ளார்.

அர்ச்சனை செய்ய வேண்டும் என அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.

ஆனால், அர்ச்சனைக்கு பெயரைச் சொல்வதற்கு முன்னதாகவே அந்தத் தீட்சிதர் தேங்காயை மட்டும் உடைத்துக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி கேட்ட லதாவை, தகாத வார்த்தைகளால் திட்டிய தீட்சிதர், அவரது கன்னத்தில் அரைந்துள்ளார். அதனால், சுருண்டு விழுந்த லதா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, லதா கொடுத்த புகாரின் பேரில், தீட்சிதர் தர்ஷன் மீது, வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நடராஜர் கோவில் ஆலய ராஜமண்டபத்தில், தனியார் நிறுவன அதிபரின் திருமணத்திற்கு, விதியை மீறி அனுமதி அளித்த சர்ச்சை தொடரும் நிலையில், தற்போது, அர்ச்சனை செய்ய வந்த பெண்ணின் கன்னத்தில் தீட்சிதர் அறைந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.