அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  முடிவு!

அயோத்தி பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில், கடந்த  9-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டது.

மேலும், முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சில முஸ்லிம் அமைப்புக்கள் அறிவித்து இருந்தன.

இந்நிலையில்,  அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் நிர்வாகிகள், ஞாயிற்றுக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கூடி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதித்தனர்.

அப்போது, அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்ப்பில், ஒரு கோவிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே, மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து, எங்களுடையது எது என்று கேட்போம் என்று வாரிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.