விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புவாரா?

மிக விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியும், கமலும் தொடர்ந்து தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி, விரைவில் அரசியலுக்கு வந்து வெற்றிடத்தை நிரப்புவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து மீடூ புகார்களை  தனது சமூகவலைதள பக்கத்தில்  பதிவிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். இதனால், சமூக ஊடகத்தில் பிசியாக இயங்கும் பலருக்கும் இவர் நன்கு அறிமுகமானவர்.

சமூக வலைத்தளங்கள் மூலமாக, தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

ஆனால், இவை அனைத்தும் தமது விளம்பரத்திற்காக நடிகை ஸ்ரீரெட்டி செய்து வருவதாக, சம்பந்தப்பட்டவர்கள், அவரது புகார்களை மறுத்து வந்தனர்..

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு ஒன்று வெளியாகி மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.

இதுகுறித்து,  ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் செய்தியாளர்களுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

எனக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றார்.  உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள்.

எனக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் கூறினார்.

என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான கணக்குகள் உள்ளன.

இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்.   மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறினார்.

நடிகர் ரஜினியும், கமலும் தொடர்ந்து கூறிவரும், “தமிழக அரசியல் வெற்றிடம்” என்பதை புரிந்து கொண்டுதான், விரைவில் அரசிலுக்கு வரப்போவதாக நடிகை கூறி இருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.