உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் அமமுக: அச்சத்தில் அதிமுக!

வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில், தினகரனின் அமமுக களமிரங்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பல இடங்களில் தங்களது வெற்றியை பாதிக்கும் என்ற அச்சம் அதிமுகவில் நிலவுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னர், அமமுக என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார்.

அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள் பலர், அமமுகவில் சேர்ந்தனர். அவர்களின் பதவியும் பறிபோனது. அதன் பின்னர், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் சென்று விட்டனர்.

முக்கிய நிர்வாகிகள் பலரும் அமமுகவை விட்டு விலகிய பின்னரும், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கான சிலர் இன்னும் அமமுகவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவர்கள் அனைவரையும், அதிமுகவுக்கு கொண்டுவர வேண்டும் என்று, அமைச்சர்கள் பட்டாளமே களமிறங்கி வேலை செய்து வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில், சில உதிரி கட்சிகளின் கூட்டணியுடன் தனித்து களமிறங்கிய அம்முக, எந்த தொகுதியிலும் பெருமளவு வாக்குகள் வாங்கவில்லை.

ஆனால், அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் பலவற்றை வேறு கட்சிகளுக்கு திருப்பி விட்டு விட்டது. இதனால், அதிமுக பல இடங்களில் குறைவான வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய அமமுக தொண்டர்கள், தேவையான செலவுகளை தங்கு தடையின்றி செய்தனர்.

மேலும், வாக்காளர்களிடம் எங்களுக்கு வாக்களியுங்கள் அல்லது திமுகவுக்கு வாக்களியுங்கள், அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்றே பிரச்சாரம் செய்தனர். இது, அதிமுக வெற்றிக்கு பாதிப்பாகவே அமைந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் என்பது, மாநகராட்சி மற்றும் ஒரு சில நகராட்சிகளை தவிர்த்து, கட்சியை கடந்து, வேட்பாளரை மையப்படுத்தி வாக்களிக்கும் தேர்தல் ஆகும்.

அதனால், இதில், அமமுக சில நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அதிமுகவின் வெற்றியை கணிசமாக பதம் பார்த்து விடும். அதன் காரணமாக அதிமுகவினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் அமமுக களமிறங்குவதற்கு சசிகலாவும் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால், தினகரனும், அவரது கட்சியினரும் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால், இது அதிமுகவை கவலையடைய செய்துள்ளது.

இந்நிலையில், அமமுகவை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து, முதல்வரும் மற்ற அமைச்சர்களும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.