ராமதாஸ் தொடங்கி வைத்த பஞ்சமி விவகாரம்: உதயநிதியை விசாரணைக்கு அழைத்த ஆணையம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கி வைத்த பஞ்சமி விவகாரம், இன்று உதயநிதி ஸ்டாலினை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணைக்கு அழைக்கும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்துவிட்டு, பஞ்சமி நில உரிமை மீட்பை மையப்படுத்தி எடுத்துள்ளதற்காக பாராட்டு தெரிவித்து இருந்தார். இது, கடந்த மாதம் 17-ம் தேதி, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.

அதையடுத்து, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தால், பாராட்டுக்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி இருந்தார்.

அடுத்து, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதை நிரூபித்தால், ராமதாசும், அவரது மகனும் அரசியலை விட்டு விலக தயாரா? என்று, முரசொலி அலுவலக பட்டா உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, ஸ்டாலின் பதில் கொடுத்து இருந்தார்.

ஆனால், முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் எங்கே? என்று ராமதாஸ் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.

உரிய ஆவணங்களை வெளியிட நான் தயார். அப்படி வெளியிட்டால், அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற எனது நிபந்தனையை ஏற்க தயாரா? என்று ஸ்டாலின் மீண்டும் சவால் விடுத்து இருந்தார்.

ஆனால், இதுவரை, முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரங்களை ஸ்டாலின் வெளியிடவில்லை.

இந்த நிலையில், பாஜக மாநில செயலாளர் ஆர்.சீனுவாசன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், முரசொலி நிர்வாக இயக்குனராக உள்ள உதயநிதி ஸ்டாலின், வரும் 19 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், விசாரணையின்போது, நிலம் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள், பத்திரங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முரசொலி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை அகற்ற, ஆணையத்தில் ஆஜராகி  உரிய விளக்கம் அளித்து பொய்யுரைப்போர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்று கூறியுள்ளார்.

மேலும், குட்கா விசாரணை,  கண்டெய்னர் லாரியில் 560 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம்,  ஆர்.கே.நகர் தேர்தலில் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் குறித்து கவலைப்படாத பாஜக அரசு, முரசொலி அறக்கட்டளை விவகாரத்தில் ஆர்வம் காட்டுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.