வேலூரில் நடந்த அரசு விழா: அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் மோதலால் பரபரப்பு!

எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாகவே பாவிக்கும் போக்கு, கலைஞர் – ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் மறைவுக்கு பின்னர், இந்த நிலை சற்று மாறத்தொடங்கியது.

சில முக்கிய விவகாரங்களில், முதல் அமைச்சர்களாக இருந்த பன்னீர், எடப்பாடி ஆகியோர், திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துவது என்றெல்லாம், தமிழக அரசியலில் காட்சிகள் மாறத்தொடங்கின.

அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் பலவற்றிலும், திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு, சுமூகமாக விழாக்கள் நடந்து கொண்டும் இருக்கின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், முதலமைச்சர் முறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர் கே.சி.வீரமணி, தொகுதி திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நந்தகுமார், தமிழக அரசு முறையாக நலத்திட்ட உதவிகளை முறையாக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் வீரமணி, நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகின்றன. ஆனால் எம்.எல்.ஏ நந்தகுமார், விளம்பரத்திற்காக தவறாக பேசுகிறார் என்று கூறினார்.

அதனால், அமைச்சருக்கும் – எம்.எல்.ஏ வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மேடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் இரு தரப்பையும் சமாதானம் செய்தார். அப்போது, மேடையில் இருந்த ஆவின் தலைவர் வேலழகன் மைக்கை சுவிட்ச் ஆப் செய்தார்.

அதனால், மீண்டும் திமுக அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுக பொறுப்பாளர் ஒருவர் மேடையில் ஏற முயன்றார். அதை அங்கிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

அதனால், கோபமடைந்த திமுக பிரமுகர், காவல் துறை அதிகாரியை பிடித்து கீழே தள்ளினார். சுதாரித்துக்கொண்ட காவல்துறை அதிகாரி, தம்மை தள்ளிவிட்டவரை தாக்கினார். அதையடுத்து, அங்கிருந்த திமுகவினர் அமைதியாயினர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அரசு விழாவில் அமைச்சரும் – எம்.எல்.ஏ வும் மோதிக்கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.