திமுக தலைவர் ஸ்டாலின் மிசா கைதிதான்: ஆடிட்டர் குருமூர்த்தி ஒப்புதல்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, எதிர்கட்சிகள் கூறி வரும் கருத்துக்கள், அண்மைக்காலமாக அவரை, கடும் டென்ஷனுக்கு உள்ளாக்கி இருந்தது.

குறிப்பாக ஸ்டாலின் மிசா கைதி அல்ல. மிசா காலத்தில் கைது செய்யப்பட்டவர். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டுப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் அனாதை இல்லத்தில் கட்டப்பட்டுள்ளது என்றெல்லாம் எதிர்கட்சிகள் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வருகின்றன.

மிசா கைது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி, போராட்டங்கள் வரை நீண்டது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட கருத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் விசாரணை ஆணைய விசாரணை வரை சென்று இருக்கிறது.

அடுத்து, அண்ணா அறிவாலயம் அனாதை இல்லத்தில் கட்டப்பட்டது என்ற சர்ச்சையும் சூடு பிடித்துள்ளது.

இந்த சர்ச்சைகளை எல்லாம் மையப்படுத்தி, சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் மற்றும் பதிவுகள், திமுகவுக்கு பின்னடைவாகவும், அதன் தலைவர் ஸ்டாலினை டென்ஷன் படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன.

ஆனால், இது குறித்து, திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் தகுந்த பதிலடிகளோ, விளக்கங்களோ கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், துக்ளக் வார இதழில், வாசகர் ஒருவர், ஸ்டாலின் மிசா கைதியா? முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமா? அண்ணா அறிவாலயம் அனாதை இல்லத்தில் கட்டப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஸ்டாலின் மிசா கைதி என்பது உண்மை. அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நான் அவருடன் முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

அதே சமயம், முரசொலி அலுவலகம் பஞ்சமி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளதா? அண்ணா அறிவாலயம் அனாதை இல்லத்தில் அமைந்துள்ளதா? என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

இதை, திமுக ஆதரவாளர்கள் பலரும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் தகுதியாக இன்று வரை சொல்லப்படுவது, அவர் மிசா கைதி என்பதைத்தான். ஆனால், அவர் மிசா கைதி அல்ல என்ற சர்ச்சையை எதிர் கட்சிகள் பரப்பி வருவது, ஸ்டாலினை உண்மையிலேயே டென்ஷன் ஆக்கியுள்ளது.

இந்நிலையில், எதிர் முகாமான பாஜகவை சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தியே, ஸ்டாலின் மிசா கைதிதான் என்று கூறி இருப்பது, திமுகவுக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது.

இது, ஸ்டாலினின் மிசா கைது சர்ச்சைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாலும், முரசொலி – பஞ்சமி, அண்ணா அறிவாலயம் – அனாதை இல்லம் போன்ற சர்ச்சைகளுக்கு அவர் எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.