திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து அனைத்துமே உதயநிதிதான்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

கலைஞர் ஆக்டிவாக இருந்த காலத்திலேயே, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அவரது குடும்ப வாரிசுகள், கட்சியின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

கலைஞர் மறைவுக்குப் பின்னர், தற்போதைய திமுகவில் மு.க.ஸ்டாலின் மட்டுமே ஒட்டுமொத்த அதிகார மையமாக திகழ்கிறார். அழகிரி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. கனிமொழியும் கட்சியில் இருக்கிறார் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு நிகராக, இளைஞரணி பொது செயலாளராக இருக்கும், அவரது மகன் உதயநிதிக்கே, தற்போது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில், அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யும் நட்சத்திர அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவர் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கனிமொழியை பொறுத்தவரை, பிரச்சாரத்திற்கு கட்சியில் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவர் மகளிர் அணி தலைவராக மட்டுமே இருக்கிறார். அதற்கும் போட்டியாக, திமுகவில் இளம் பெண்கள் பாசறை உருவாகி வருகிறது.

இவை அனைத்தும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்து, அனைத்தும் உதயநிதிதான் என்று அறிவுறுத்தப்படுவதன் அடையாளமே.

இந்த நிலையில்தான், சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று, சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் உதயநிதிக்காக விருப்பமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், இந்த சிறிய வயதில், உதயநிதி தற்போது, மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் பணிகள் தொடர்பாக சில அனுபவங்களை அவர் பெறவேண்டும். அதுவே, அவரது பிற்கால அரசியல் அணுகுமுறைக்கு சரியான அனுபவமாக  இருக்கும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார்.

அதனால், முதல்கட்டமாக, சென்னை மாவட்ட திமுக நடவடிக்கைகள் அனைத்தும், உதயநிதியின் கட்டுப்பாட்டில் விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடக்கமாக, சென்னை மாவட்டத்தில் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் அலுவலகங்களை திறந்து வைக்கும் பொறுப்பு உதயநிதிக்கு  வழங்கப்பட்டது.

இதன்மூலம், சென்னை மாவட்ட திமுகவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட உதயநிதி, அடுத்து, சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்காக தேர்தல் பணிகள் செய்யும் பொறுப்பையும் கையில் எடுத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, ஐம்பது லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது அவரது திட்டமாக உள்ளது.

இதற்காக, உதயநிதி, தனது தந்தையை போல, நமக்கு நாமே பாணியில் களம் இறங்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை தொண்டர்கள் மற்றும் இளைஞர் அணியின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு மாநில அளவில் ஏதோ ஒரு பொறுப்பு வழங்கப்படும்.

அப்படி காலியாகும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்களில், உதயநிதிக்கு தோதாக இயங்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவை அனைத்தும் முடிந்த பிறகு கட்சியின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும், உதயநிதியின் கைகளுக்கு வரலாம் என்பதே எதிர்பார்ப்பு.

அந்த நிலை வரும்போது, கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்து அனைத்துமே, உதயநிதி என்பது அனைவருக்கும் உணர்த்தப்படும்.

எனவே, இப்போதே உதயநிதியின் மனதில் இடம்பெறுவது எப்படி? என்பது குறித்த சிந்தனையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.