சாமானியனையும் சாதனையாளனாக்கும் “சிவராஜ யோகம்”

சிவராஜ யோகம் என்பது, சிவன் என்ற சூரியனுக்கும், குரு என்ற ராஜாவும் சம்பந்தப்படும் யோகமாகும். சூரியன், குரு பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை ஆகியவை  இந்த யோகத்தை தருகின்றன.

சூரியன், தாம் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்யும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடத்தை பார்வை செய்யும்.

அதன்படி, சூரியன், குரு ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருந்தாலோ, அல்லது ஒன்றின் பார்வை மற்றொன்றின் மீது விழுந்தாலோ, அல்லது இரு கிரகங்களும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ இந்த யோகம் வேலை செய்யும்.

இரண்டு கிரகங்களும், ஜாதகரின் லக்னத்திற்கு ஏற்ப, நல்ல ஆதிபத்தியம் பெற்று மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால் சிறப்பு.

சிவராஜ யோகம் அமைந்த ஜாதகர்கள், வாழ்க்கையில் எப்படியும் உயர்ந்த நிலையை அடையாமல் இருப்பதில்லை. அரசியல் என்று இல்லாமல், ஒரு நிறுவனத்தில் சாதாரண நிலையில் வேலைக்கு சேரும் நபர், இறுதியில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி வரை பதவி உயர்வு பெறுவார்.

அதேபோல், புகழ்மிக்க சிவன் கோவிலை கட்டுபவர்கள், புதுப்பிப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த யோகம் அமைந்திருக்கும். முக்கிய அரசியல் தலைவர்கள் பலரது ஜாதகத்திலும் இந்த அமைப்பை காண முடியும்.