சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிட வலியுறுத்தல்: விருப்ப மனுக்களை தாக்கல் செய்யும் திமுகவினர்!

சென்னை என்பதும், சென்னை மாநகராட்சி என்பதும், பல காலங்கள் தொடந்து  திமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.

எம்ஜிஆர் காலத்தில் கூட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும், சென்னையை  எப்போதுமே திமுகதான் கைப்பற்றும்.

ராஜீவ் படுகொலை நடந்த 1991 ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே, சென்னையின் பல தொகுதிகளை அதிமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

அதன் பிறகுதான், அதிமுகவின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் சாத்தியமானது. எனினும், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திமுகவின் கையே ஓங்கி இருந்தது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில்தான், சென்னை மாநகராட்சியை அதிமுக நேரடியாக கைப்பற்றியது. சைதை துரைசாமி மேயராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு, எந்நேரமும் வரலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற ஆரம்பித்துள்ளன.

இதையொட்டி, வரும் உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகர மேயர் தேர்தலில், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று, திமுகவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், உதயநிதிக்காக விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் பலரும் அவருக்காக விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், திமுகவில், அவருக்கு போட்டியாக மற்றவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுகவை பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களின் போட்டிகள் இல்லாத நிலையில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

அவரது மகன் உதயநிதி, எந்தவித எதிர்ப்பும் இன்றி, ஏற்கனவே ஸ்டாலின் வகித்து வந்த இளைஞரணி பொதுசெயலாளர் பதவியை, சிறு இடைவெளிக்கு பின் பெற்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே, உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பலர் கட்சியில் வலியுறுத்தினர். அடுத்து, விக்ரவாண்டி இடைத்தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி விருப்பமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அமைச்சர் சி.வி.சண்முகம், பாமகவின் வாக்கு வங்கி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உதயநிதியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று ஸ்டாலின் கருதினார்.

ஆனால், சென்னை என்பது, திமுக வலுவாக உள்ள மாநகரம் என்பதால், இங்கு மேயராக போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஸ்டாலினும் இதை மறுக்க மாட்டார் என்றே திமுகவினர் நினைக்கின்றனர்.

மேலும், ஸ்டாலினும் ஏற்கனவே, சென்னை மாநகர மேயராக இருந்தவர் என்பதால், அவரது மகனான உதயநிதியும், மேயராக வரவேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் விரும்புவதாகவே தெரிகிறது.

எனவே, திமுகவின் சென்னை மாநகர மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.