தமிழக தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி இடமாற்றம்: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை, தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை இணை ஆணையர் கோவிந்த்ராவ் தஞ்சை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமி திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என்று பதிவிட்டுள்ளார்.