உள்ளாட்சி தேர்தல்:  தனித்து போட்டியிட விரும்பும் தமிழக பாஜக!

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், முதல்வர், தமிழக அமைச்சர்கள் என திரண்டு வந்து வந்து உற்சாக வரவேற்பு அளிப்பதும், தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவினரை சீண்டாத போக்குமே அதிமுகவில் நிலவுகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜகவினரை கொஞ்சம் கூட அதிமுகவினர் மதிக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணனே இதை உணர்ந்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால், அதிமுக மற்றும் இதர கூட்டணி கட்சிகள் தங்களை எவ்வாறு நடத்தும்? என்ற சந்தேகம் பாஜகவினருக்கு எழுந்துள்ளது.

அத்துடன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, கடந்த 2011 ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மோடி என்ற பிம்பமே தெரியாத நிலையிலும், பாஜக தனித்து நின்று இரண்டு நகராட்சி மற்றும் இரண்டு ஒன்றியங்களில் வெற்றி பெற்றது.

தற்போது மத்தியில் பாஜக ஆட்சி, பிரதமர் மோடி என்ற இமேஜ், மத்திய அரசின் நலத்திட்டங்கள் என பல சாதகமான அம்சங்கள் உள்ளன.

அதனால், உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் கண்டால் என்ன? ஒரு யோசனை தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால், சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே கிடைக்கும். அங்குள்ள பாஜகவினர் மட்டுமே களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள். மற்ற இடங்களில் உள்ள பாஜகவினரை, கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்திற்கு கூட அழைப்பது சந்தேகம்.

அதனால், பாஜக தனித்து களம்கானும் போது, தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பிரச்சார களத்தில் இறங்கி பணியாற்ற முடியும் என்று தமிழ பாஜக தரப்பு கருதுகிறது.

இதனால், கன்யாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு வலுவான வாக்கு வங்கிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இது சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது, பாஜக தேசிய தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.