அரசியல் கவனம் முழுவதும் தன் பக்கம் திரும்ப வேண்டும்: ரஜினி – கமலை விடாமல் துரத்தும் எடப்பாடி!

ஜெயலலிதா உயிருடன் இருந்து, இடைக்கால முதல்வராக இருந்தால் ஒரு எழுத்தரைப்போல பவ்வியமாக முதல்வர் பணியில் அமர்ந்திருக்க வேண்டும்.

சசிகலா சிறை செல்லாமல் இருந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களின் குறுக்கீடுகளை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்த இரண்டு நெருக்கடிகளும் இல்லாமல், டெல்லி மேலிடத்தின் ஆசி மற்றும் ஆதரவுடன் இயங்கும் முதல்வர் எடப்பாடி, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி மற்றும் கட்சியில் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டே வருகிறார்.

கட்சி, ஆட்சி, சின்னம் என அனைத்தும் கிட்டத்தட்ட எடப்பாடியின் வசம் மிகவும் நெருங்கி விட்டது. அடுத்து, ஜெயலலிதா போல, கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டிய ஒன்றுதான் பாக்கி.

முதல்வராக பொறுப்பேற்று மூன்று வருடங்களை நெருங்கியுள்ள நிலையில், உள்கட்சி எதிர்ப்பு, எதிர்கட்சியை சமாளிப்பது போன்றவற்றில் வெற்றி கண்ட எடப்பாடி, எம்.எல்.ஏ, எம்.பி. அமைச்சர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதிலும் தொண்ணூறு சதவிகிதம் வெற்றி கண்டு விட்டார்.

அடுத்து, திமுக என்றால் ஸ்டாலின் என்று சொல்வது போல, அதிமுக என்றால் எடப்பாடி என்று செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

அப்போதுதான், தமிழக அரசியலின் முழு கவனமும் தன் பக்கம் திரும்பும் என்பது அவரது கணக்கு.

அதன் காரணமாகவே, அண்மைக்காலமாக, ரஜினி மற்றும் கமல் பேசும் கருத்துக்களுக்கு தொடர்ந்து காரசாரமாக பதிலடி கொடுத்து வருகிறார்.

ரஜினி சொன்ன வெற்றிடம் என்ற சொல்லுக்கு, வெற்றிடத்திற்கு இடைத்தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைத்து விட்டன என்று. விக்கிரவாண்டி கூட்டத்தில் மறைமுகமாக பதில் சொன்னார்.

மற்றொரு பேட்டியில், நேரடியாக ரஜினி என்ன நடிகர்தானே? அரசியல் தலைவர் இல்லையே என்றார். சினிமாவில் வயதானால், அரசியலுக்கு வந்து விடுகிறார்கள் என்றார். அரசியலின் அடிப்படை தெரியாது என்று கமலஹாசனை ஒரு கூட்டத்தில் விமர்சித்தார்.

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும் என்றார். இவ்வாறு, கமல், ரஜினிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே வருகிறார் எடப்பாடி.

கூர்மையாக கவனித்து வந்தால், தற்போது கூட்டணி கட்சிகளாக உள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தவிர, மற்ற அனைத்து கட்சிகளும், முதல்வரின் விமர்சனத்தில் இருந்து தப்பவே இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி,, அதை ஒட்டி, 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை இழந்து  9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலை வரை முதல்வர் எடப்பாடி கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

பின்னர் வேலூரில் நடந்த மக்களவை தேர்தலில், சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அடைந்த தோல்வி, சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி,அவரது தலைமையின் வலிமையை உறுதிப்படுத்தி விட்டது.

அதன் பின்னர், அவரது அணுகுமுறையே மாறிவிட்டது. தற்போது, ரஜினி, கமல் என யார் எந்த கருத்து சொன்னாலும், உடனடியாக பதில் கொடுப்பதன் மூலம், தமிழக அரசியலின் கவனம் முழுவதும் தன்னை நோக்கியே திரும்ப வேண்டும் நிலையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.