உள்ளாட்சி தேர்தல்: முதியோர் ஓய்வூதிய திட்டத்தை விரைவுபடுத்தும்  முதல்வர்!

தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்றும், தேர்தல் தேதிகள் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறத் தொடங்கி விட்டன.

அதேபோல், கூட்டணி கட்சிகளுடனான பேச்சு வார்த்தைகளும், இடப்பங்கீடு தொடர்பான பேச்சுக்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை போல, உள்ளாட்சி தேர்தல்களிலும், அமோக வெற்றியை பெறவேண்டும் என்று அதிமுக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, முதியோரின் வாக்குகளை குறிவைத்து, தற்போது காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

55 முதல்  60 வயது வரையில் உள்ள பெரும்பாலான முதியவர்கள், கூடுமானவரை எம்ஜியார் ரசிகர்களாக இருப்பார்கள். இவர்களின் மனதில், இரட்டை இலை சின்னம் அழியாமல் இருக்கும்.

எனவே, முதியோர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுக தொண்டர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, முதியோர் ஓய்வூதியம் பெறும் நிலையில் உள்ள அனைவருக்கும், அதை பெற்றுத்தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

சமூகத்தில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை குறி வைத்து, அனைத்து கட்சிகளும் களமிறங்கி வேலை செய்து வரும் நிலையில், முதியோர் வாக்குகளையும், குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி.

எப்படியோ, வயதான முதியோர்களுக்கு அலையாமல் திரியாமல், ஓய்வூதியம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.