மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி சரியா?: ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியை ஏன் அழைக்கவில்லை என கேள்வி!

மகாராஷ்டிரா அரசியலில் நேற்று திடீர் திருப்பமாக, நேற்று மாலை குடியரசு ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜக, சிவசேனா, என்சிபி போன்ற கட்சிகளை ஆட்சி  அமைக்க அழைத்த ஆளுநர், காங்கிரஸ் கட்சியை ஏன் அழைக்கவில்லை என்று அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாலம் ரந்தீப் சுர்ஜெவாலா, இந்த கேள்வியை எழுப்பி உள்ளார். அதேபோல், நேற்று இரவு 8.30 மணிவரை கால அவகாசம் இருந்தும், அதற்கு முன்பே குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்று வாரங்கள் ஆகியும் அங்கு ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நிலவி வந்ததால், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், நாங்கள் கோரிய மூன்று நாட்கள் எங்களுக்கு அவகாசம் கொடுத்திருந்தால், பெரும்பான்மையை நிரூபித்து இருப்போம் என்று சிவசேனா கூறி உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் கூறும்போது, கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, அரசியலமைப்பு திட்டத்தின் நான்கு கடுமையான மீறல்கள் தனித்து நிற்கின்றன.

மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் தேர்தல் முடிவுக்குப் பின், மிகப்பெரிய கூட்டணியை அதாவது பாஜக-சிவசேனாவை ஒன்றாக அழைத்திருக்க வேண்டும்.

அதன் பின்னரே, இரண்டாவது மிகப்பெரிய கூட்டணி, அதாவது காங்கிரஸ்-என்சிபியை அழைத்திருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

ஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக, நேரத்தை முற்றிலும் தன்னிச்சையாக ஒதுக்கியது ஏன்?

குடியரசு தலைவர் ஆட்சிக்கு முன் பாஜகவுக்கு 48 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. சிவசேனாவுக்கு 24 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. என்சிபிக்கு 24 மணிநேரம் கூட ஒதுக்கப்படவில்லை. இது நேர்மையற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது, என்றும் காங்கிரஸ் கூறி உள்ளது.