மகராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி!

மகராஷ்டிரா  மாநிலத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர்  ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

288  உறுப்பினர்களை கொண்ட மகராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில், முதல்வர் பதவியை மையப்படுத்தி மோதல் ஏற்பட்டது. அதனால், அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதலமைச்சர் பதவியை, முதல் இரண்டரை ஆண்டுகள் தருமாறு சிவசேனா கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்டது..

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாஜகவை  ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், பாஜக ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று கூறி விட்டது.

அதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம்  ஆளுநர்,  ஆட்சி அமைக்க அழைத்தார்.

சிவசேனா குழுவினர் ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க மூன்று நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க  ஆளுநர் மறுத்து விட்டார்.

அடுத்து, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா?  என்று  என்பது பற்றி இன்று இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில்,  சரத்பவார் காங்கிரசுடன் சேர்ந்து  ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டினார். எனினும், அதற்குள் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர்  ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை  செய்தார்.

இதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர்  ஆட்சி அமலுக்கு வந்தது.