700 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற பாஜக: பாதிக்கு மேல் வழங்கிய டாடா நிறுவனம்!

தேசிய கட்சியான பாஜக 2018 -19  நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு மேல் தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை டாடா குழுமத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

காசோலைகள் மற்றும்  ஆன்லைன் பரிமாற்றம் மூலம் இந்த நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. இதில் டாடா குழுமத்தின் சார்பில் மட்டும் ரூ. 356  கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி மத்தியில் ஆளும் பாஜகவும் சமர்ப்பித்துள்ளது.

இதில், பாஜக 2018 -19 ஆம் நிதி ஆண்டில், ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள் மற்றும் ஆன்லைன் வழியாக நன்கொடை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது.

டாடாவால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பாதிக்கு மேலாக ரூ.356 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவின் வசதியான, அறக்கட்டளையான புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை, ரூ.54.25 கோடி நன்கொடை வழங்கியது என்று பாஜக தேர்தல் ஆணையத்திற்கு அளித்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை என்பது பாரதி குழுமம், ஹீரோ மோட்டோகார்ப், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமென்ட், டி.எல்.எஃப், ஜே.கே. டயர்ஸ் உள்ளிட்ட உயர்மட்ட கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது.

ரூ.20 ஆயிரத்திற்கும் மேல், காசோலையாகவோ, ஆன்லைன் வழியாகவோ நன்கொடையாக பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நன்கொடை ரசீதுகள் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்தல் விதிமுறையின்படி, அரசியல் கட்சிகள் ஒரு நிதியாண்டில் அவர்கள் பெறும் அனைத்து நன்கொடைகளையும் வெளியிட வேண்டும்.

தற்போது, ​​அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக, தேர்தல் நன்கொடை ரசிதுகள் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.