சமூக பின்னணி இல்லாத தலைவர்களின் தேர்வு: பாஜகவுக்கு  சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு!

2014  ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜக  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்ததால், கூட்டணி கட்சிகளின் தயவு இன்றி பிரதமராக பதவி ஏற்றார் மோடி.

அடுத்து  இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், பாஜக அமோகமாக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.

இந்த இடைப்பட்ட காலத்தில், பாஜக என்றால் என்னவென்றே அறியாத வடகிழக்கு மாநிலங்களில் கூட, பாஜக ஆட்சியில் அமர்வதற்கு வழிவகை செய்தவர் அமித்ஷா.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில், பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், சில பிராந்திய கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது பாஜக.

ஹரியானாவில், துஷ்யந்த சவுதாலாவை துணை முதல்வராக்கி, அவரது ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன்தான், அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை, கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட சிவசேனா கட்சியை, பாஜகவால் கொஞ்சம் கூட சமரசம் செய்ய முடியவில்லை.

இரண்டாவது முறையும் தாமே முதல்வர் என்ற நிலையில் இருந்த தேவேந்திர பட்னாவிசின் கனவை, சிவசேனா தகர்த்து விட்டது. அதுமட்டும் அல்ல, அமித்ஷாவே பலமுறை முயற்சித்தும், அவரோடு உத்தவ் தாக்கரே பேச மறுத்தது, பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

மக்களவை என்று வரும்போது, பாஜகவுக்கு வெற்றியை தரும் வாக்காளர்கள், மாநில சட்டமன்றம் என்று வரும்போது, தேசிய கட்சிகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இதற்கு அந்தந்த பிராந்திய அரசியல் களத்தில் சொல்லப்படும் காரணங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளன.

காங்கிரஸ் தொடங்கி, பாஜக வரை, ஒற்றை தலைமை, வலுவான தலைமை என்பதையே அதிகம் விரும்புகின்றன.

அதற்காக மாநில அளவில் வலுவான தலைவரை உருவாக்கவும், அவ்வாறு உருவான தலைவரை அங்கீகரிக்கவும் எப்போதுமே விரும்புவதில்லை.

ஒரு தேசிய கட்சிக்கு, மாநில அளவில் செல்வாக்கு உள்ள ஒரு தலைவர் உருவானால், அவர் தேசிய தலைமைக்கு இடையூறு என்றே தேசிய கட்சிகள் கருதுகின்றன.

அதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சியில் காமராஜர், நிஜலிங்கப்பா, பிரும்மானந்த ரெட்டி, அத்திலே கோஷ் போன்ற மாநில அளவில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எல்லாம் அப்போதைய காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி ஒழித்தார்.

அதனால், பல்வேறு மாநிலங்களிலும் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்று, கூட்டணிக்காக பிராந்திய கட்சிகளின் தயவை நாடும் நிலைக்கு ஆளாகி உள்ளது.

அதேநிலைதான், இன்று பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் பெரும்பான்மை சமூகமான ஜாட் சமூகத்தில் இருந்து, முதல்வரை தேர்வு செய்யாமல், சிறுபான்மை இனத்தில் இருந்து, கட்டார் என்பவரை முதல்வராக ஆக்கியது.

இதன் காரணமாகவே, அங்கு பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. மீண்டும், ஜாட் சமூக தலைவரின் வாரிசான துஷ்யந்த சவுதாலாவின் ஆதரவில்தான், ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

மேலும், ஹரியானாவில் காங்கிரசுக்கு கணிசமான இடங்கள் கூட கிடைக்காது என்று, எதிர்பார்த்த நிலையில், கடைசி கட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக களமிறங்கிய ஜாட் இனத்தின் ஹூடா, பாஜகவுக்கு அடுத்து அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் அளவுக்கு தேர்தல் களத்தை மாற்றி அமைத்து விட்டார்.

மகாராஷ்டிராவில் மண்ணின் மைந்தர்களை மையப்படுத்தும் ஆட்சியே சிவசேனாவின் அடிப்படை முழக்கம். ஆனால், கடந்த முறை பொறுமையாக இருந்த சிவசேனா, இந்த முறை, தேவேந்திர பட்னாவிசை முதல்வராக ஏற்க மறுத்து விட்டது.

கடந்த முறை மகாராஷ்டிராவின் பெரும்பான்மை சமூகமான மராட்டிய சமூகத்திற்கு, முதல்வர் பட்னாவிஸ் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு வழங்கிய போதும், அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.

மேலும், மகாராஷ்டிராவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், மராட்டிய இனத்தின் வாக்குகள் எப்போதும், அவர்களது சமூகத்தை சேர்ந்த சரத்பவாரின், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் கிடைக்கும்.

அதனால், மகாராஷ்டிரா அரசியலில் சரத்பவார் எப்போதுமே செல்வாக்கு குறையாத தலைவராகவே வலம் வந்துகொண்டிருப்பார்.

எனவே, மராட்டியத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களை மையப்படுத்தி செயல்படும் இயக்கங்கள். அங்கு, தேவேந்திர பட்னாவிஸ், பெரிய அளவில் சமூக பின்னணி கொண்டவராக இல்லாததால், சிவசேனா அவரை புறக்கணிப்பதாக சொல்லப்படுகிறது.  .

இதேபோல், கர்நாடகாவில் சமூக பின்னணியும், பொருளாதார பின்னணியும் கொண்ட எடியூரப்பா, நெருக்கடி காரணமாக, ஒரு கட்டத்தில் பாஜகவை விட்டு விலக நேர்ந்தது.

எனினும், அம்மாநிலத்தில் பாஜக கால் பதிக்க, எடியூரப்பா மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தே, மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு, முதல்வர் ஆகி இருக்கிறார்.

எனவே, மாநில உணர்வு, சமூக பொருளாதார பின்னணி இல்லாத தலைவர்களை கொண்டு, எந்த மாநிலத்திலும் அரசியல் அங்கீகாரம் பெறமுடியாது என்பதே,, தேர்தல் முடிவுகள் காட்டும் உண்மை. இந்த உண்மையை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும்.