ரஜினி கமலை விமர்சிக்கும் முதல்வர்: தேவை இல்லாமல் சிவாஜியை இழுப்பது ஏன்?

நடிகர் ரஜினி மற்றும் கமலை விமர்சிக்கும் முதல்வர் எடப்பாடி, தேவை இல்லாமல் மறைந்த நடிகர் திலகம் சிவாஜியை வம்புக்கு இழுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மைக்காலமாக, குறிப்பாக விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலுக்குப் பின்னர், முதல்வர் எடப்படியின் அணுகுமுறை முற்றிலும் மாறி உள்ளது. இதை அவரது பேச்சின் மூலம் நன்கு உணர முடிகிறது.

கடந்த எட்டாம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, தமிழகத்தில் சரியான தலைவருக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது என்று கூறினார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்த தேர்தல் இது என்று, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டத்தில், மறைமுகமாக ரஜினிக்கு பதில் சொன்னார் முதல்வர் எடப்பாடி.

இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், வெற்றிடம் உள்ளது என்று சொன்னது நடிகர் தானே, அரசியல் தலைவர் அல்லவே என்று கூறினார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பேசிய முதல்வர் கட்சி ஆரம்பித்த சிவாஜியின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும் என்று வெளிப்படையாகவே பேசினார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், முன்னெச்சரிக்கையாக நடிகர் கமலஹாசன் கட்சி தொடங்கி உள்ளார். அரசியல் பற்றி கமலஹாசனுக்கு என்ன தெரியும். அடிப்படை தெரியாமலே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார்.

தனது படத்தை தொண்டர்களாவது பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறிய முதல்வர், இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் உள்ள கிராமங்கள், மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பது தெரியாமலே கமல் அரசியலுக்கு வந்து விட்டார் என்றும் அவர் கூறினார்.

ரஜினியையும் கமலையும் விமர்சிக்கும் முதல்வர் எடப்பாடி, தேவை இல்லாமல் சிவாஜியையும் வம்புக்கு இழுப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சிவாஜி சமூக நலப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், வயதான பிறகுதான் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய தலைவர் எம்ஜிஆரையும் சேர்த்துதான், தமிழக முதல்வர் கூறியிருப்பார் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியுள்ளது.