ரஜினி என்ன அரசியல் தலைவரா? நடிகர் தானே: முதல்வர் எடப்பாடி!

ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுமை உள்ள தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, இன்னும் சரியான தலைவருக்கான வெற்றிடம் தமிழகத்தில் இருக்கிறது என்று மீண்டும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்து, அதிமுக மற்றும் திமுக தலைவர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதனால், தொடர்ந்து வெவ்வேறு விதமாக, அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் இந்த கருத்துக்கு அன்றே பதில் சொன்ன திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை காற்று நிரப்பும். தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டார். ரஜினி அரசியலுக்கு வரும்போது இதை உணர்ந்து கொள்வார் என்று கூறி இருந்தார்.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து கூறும்போது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தனித்தன்மையான இடத்தை யாரும் நிரப்ப முடியாது. ஆனால், தற்போது தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று கூறினார்.

அன்றைய தினம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, அதிமுகவில் வெற்றிடம் என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இடைத்தேர்தல் இது என்று, மறைமுகமாக பதில் அளித்தார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்று யார் சொன்னது?

ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சி தலைவரா? அவர் ஒரு நடிகர் தானே. வெற்றிடம் குறித்து அரசியல் தலைவர்கள் யாரும் சொல்லவில்லையே? என்றார்.