காங்கிரஸ் – என்சிபியுடன் கூட்டணி: சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளில் சமரசமா?

இந்துத்துவா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கொள்கைகளில் பாஜகவுக்கும் – சிவசேனாவுக்கும் பெரிய அளவில் மாற்றம் கிடையாது. இதன் காரணமாகவே, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, பாஜகவும் சிவசேனாவும் தொடர்ந்து கூட்டணி கட்சிகளாக உள்ளன.

தற்போது, முதல்வர் பதவியை மையப்படுத்தி பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் எழுந்த மோதல், இத்தனை காலமாக இருந்த கூட்டணியை  முறிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

மறுபக்கம் சிவசேனாவுக்கு நேர் எதிர்மாறான கொள்கைகளை கொண்டுள்ள, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் கட்டாயத்தில் உள்ள சிவசேனா, அதற்காக சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

காங்கிரஸ், என்சிபி நிபந்தனையை ஏற்று, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா முற்றிலும் விலகி விட்டது. சிவசேனா கட்சியின் மத்திய அமைச்சரையும் ராஜினாமா செய்ய வைத்து விட்டது.

மேலும், அடிப்படை கொள்கைகளிலும் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டிய நிலையிலும் சிவசேனா உள்ளது.

தாக்கரே குடும்பத்தில் இருந்து இதுவரை யாரும் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. முதன்முறையாக, உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியை இழந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில், சிவசேனாவை அடுத்து நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உத்தவ் தாக்கரேவுக்கு உள்ளது.

அதனால், அடிப்படை கொள்கைகள் சிலவற்றில் சில சமரசங்களை செய்துகொண்டே, காங்கிரஸ் மற்றும் என்சிபியின் ஆதரவை பெற்றுள்ளது சிவசேனா.

மறுபக்கம், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு காங்கிரஸ் கட்சியிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும்,மகராஷ்டிராவில்  பாஜகவின் ஆதிக்கத்தை அகற்ற காங்கிரஸ், என்சிபிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பே என்ற கருத்தையும் மறுப்பதற்கு இல்லை.

சிவசேனாவை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பை தோளில் சுமந்துள்ள உத்தவ் தாக்ரே, தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் நிலைப்பாட்டையும் கையில் எடுத்துள்ளார்.

அதனால், பாஜக கொடுக்கும் கடுமையான நெருக்கடிகள், எம்.எல்.ஏ க்களை வளைத்தல் போன்ற சிக்கல்களை சமாளிக்கவும் உத்தவ் தாக்கரே தயாராக இருக்க வேண்டும்.

இதை எல்லாம் அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டால், அவர் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசு என்பதை நிச்சயம் நிரூபித்து விடுவார்.