மராட்டிய ஆளுநரின் கெடு முடியும் நிலை:  சிவசேனா இன்று ஆட்சி அமைக்குமா?

 மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க, அம்மாநில ஆளுநர் அளித்துள்ள 24 மணி நேர கெடு இன்றுடன் (செவ்வாய் கிழமை) முடிகிறது. குறுகிய கால இடைவெளியில், சிவசேனா எப்படி ஆட்சி அமைக்கப் போகிறது? என்பதை பலரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

மகராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 105 இடங்களிலும்,  அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையையும் பெற்றுள்ளன.

எனினும், முதல்வர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்ததாலும், சிவசேனா விட்டுகொடுக்க மறுத்ததாலும், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அதிக இடங்களில் வென்ற பாஜக, ஆட்சி அமைக்க தமக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம்  தெரிவித்து விட்டது. அதனால், இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று அழைத்து பேசினார் ஆளுநர்.

அப்போது, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க தங்களுக்கு இரண்டுநாள் அவகாசம் வேண்டும் என சிவசேனா கோரியது. ஆனால், ஆளுநர் இரண்டுநாள் அவகாசம் தர மறுத்துள்ளார், ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  54 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, சரத்பவாரின்  தேசியவாத காங்கிரஸ்,  44 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், சிவசேனா இன்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, காங்கிரஸ் கூட்டணி விதித்த நிபந்தனைகளை ஏற்று, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிவசேனா அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவுடனான கூட்டணியையும் சிவசேனா முறித்துக் கொண்டுள்ளது.