திமுகவுக்கு எதிராகவே ரஜினி களமிறங்குவார்:  பாஜக போடும் புது கணக்கு!

பாஜக என்றால் என்னவென்றே அறியாத வடகிழக்கு மாநிலங்களில் கூட, அக்கட்சியை கொண்டு சேர்த்தவர் அமித்ஷா.

அவரே, தமிழகத்தின் அரசியல் போக்கையும், நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யும் பாதையையும் கணிக்க முடியாமல் திணறி வருகிறார்.

தமிழகத்தில் எழுபது சதவிகிதத்திற்கு மேல் இந்துக்கள் இருக்கின்றனர். இவர்களில் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆனாலும், ஆன்மீகத்தை மையப்படுத்தி அரசியல் செய்யும் பாஜகவை கொஞ்சம் கூட ஏற்கும் மனநிலை தமிழகத்தில் இல்லை.

அதேபோல், ஆன்மீக அரசியையே தமது கொள்கையாக கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தும், பாஜக தொடர்ந்து வீசும் வலையில் சிக்காமல் நழுவிகொண்டே இருக்கிறார்.

ரஜினியின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அமித்ஷா,, தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் பாஜக நிர்வாகிகளிடம், தொடர்ந்து ரஜினி குறித்து பேசுகிறார்.

சில நேரங்களில் ரஜினி பேசுவது பாஜகவுக்கு ஆதரவாக தெரிகிறது. சில நேரங்களில் எதிராக தெரிகிறது. எனவேதான், ரஜினியின் எண்ண ஓட்டத்தை அமித்ஷாவால் கணிக்க முடியாமல் போகிறது.

இந்த நிலையில்தான், காவி சாயத்தில் நானும் சிக்க மாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்ட்டார் என்று, கடந்த வெள்ளிக்கிழமை ரஜினி தனது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி விட்டார்.

இதையடுத்து, ரஜினி அவருடைய போக்கிலேயே போகட்டும், அவர் வழியிலேயே, ஒரு கூட்டணியை உருவாக்கி, அவரை பொதுவான முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என்று நினைக்கிறது பாஜக.

எப்படியும், அவர் திமுகவுக்கு எதிராகத்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார். அந்த நிலைப்பாடு, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஏற்ற நிலைப்பாடே.

அதனால், தற்போது கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பங்களிப்புடன், ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்பதே பாஜக போடும் புதிய கணக்கு.

ஆனால், ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் பாஜக போடும் கணக்கை, கூட்டணி கட்சிகள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பது? முக்கிய கேள்வி.

அதிமுக தொடங்கி 1977, 1980, 1984  ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்று,  மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1991, 2001. 2011, 2016  ஆகிய நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்ந்து வருகிறார்.

இவ்வாறு, வலுவான தொண்டர்களை கொண்ட தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுக, ரஜினி முதல்வர் என்பதை ஆதரித்து, அவர் பின்னால் நிற்கும் என்று கனவில் கூட எதிர்பார்க்க முடியாது.

ஒருவேளை, டெல்லியின் வற்புறுத்தலை மீறமுடியாத நிலையில் அதிமுக தலைமை, அதை ஏற்றாலும், தொண்டர்கள் அதை நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என்பதே உண்மை,

அதேபோல், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், ரஜினியை முன்னிலைப்படுத்துவதை எந்த அளவுக்கு ஏற்கும் என்ற கேள்வியும் உள்ளது.

பாஜக போடும் கணக்கு ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த தேர்தலில் திமுக ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவுமே களமிறங்கும்.

ரஜினியை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தினால், பாஜகவோடு அனுசரித்து செல்லும் சில கட்சிகள் வேண்டுமானால் அதில் இடம் பெறலாம்.

அப்படி ஒரு நிலை வந்தாலும், தமிழகத்தில் மூன்று அணிகள் களம் காண்பதற்கு  வழி வகுக்குமே ஒழிய, திமுகவுக்கு எதிராக ரஜினியை முன்னிறுத்தி, அதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை பின்னிறுத்தும் கணக்குகள் கொஞ்சமும் எடுபடாது.

உண்மையை சொல்லப்போனால், தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தையும், ரஜினியின் மன ஓட்டத்தையும் புரிந்து கொள்வது பாஜகவுக்கு, அவ்வளவு எளிதான காரியமல்ல.