உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகே கட்சியின் அமைப்பு தேர்தல்: திமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், திமுகவின் அமைப்பு தேர்தலை, அடுத்த ஆண்டு நடத்தி முடிக்க அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் தொடங்கியது. திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள்,  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி ஆகியோர்  படங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்மையில் மறைந்த திமுக உறுப்பினர்கள், பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

திமுக அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றம்.

அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

இந்திய அரசியல் சட்டம் 70-ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.