தமிழக அரசியல் களத்தை சூடாக்கும் ரஜினி வாய்ஸ்: திமுக – பாஜக பதிலடி!

ரஜினி வாயை திறந்தாலே தமிழக அரசியல் களம் சூடாகும் என்பதற்கு இதற்கு முன் பல உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில், ரஜினிகாந்த் இன்று சொன்ன சில கருத்துக்களும், தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அவர் சொன்ன கருத்துக்கு திமுக மற்றும் பாஜக பதில் கூறி உள்ளன.

ரஜினியின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும், அவர் ஏதாவது விஷயத்தை பற்றி பேசுவார். அரசியல் கட்சிகள் மத்தியில் அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். பின்னர் அவர் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று விடுவார்.

சென்னையில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தில், மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கமல் – ரஜினி ஆகிய இருவரும் சிலையை திறந்து வைத்தனர்.

விழாவுக்கு பின்னர் வீடு திரும்பிய ரஜினி, தமது வீட்டு வாசலில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது, திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகளையும், சித்தர்களையும் சாதி, மத எல்லைக்கும் அடக்கிவிட முடியாது என்றார்.

திருவள்ளுவர் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்துள்ளது. அவரது கோயிலை பார்த்தாலே அது தெரியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர். அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்டது. ஆனால் ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளில் எல்லாம் காவி உடை அணிவிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை.

நாட்டில் மக்களுக்கான பிரச்சினைகளும், தேவைகளும் எத்தனையோ இருக்கும்போது, இதனை பெரிய விஷயமாக்குவது சிறுபிள்ளை தனமானது என்று கூறினார்.

பாஜகவில் இணைவது குறித்து எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. திருவள்ளுவரை போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினி குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர், முதல்வர் ஆகும் வரை படம் நடித்ததை குறிப்பிட்ட ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை படத்தில் நடிப்பேன் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கள் வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, பாஜகவின் தமிழக பொறுப்பாளர், முரளீதர் ராவ், ரஜினி பாஜகவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறிய ரஜினிக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம், தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது.

தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால்,  ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று கூறியுள்ளார்