பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம்: தவிர்க்கும் தமிழக கட்சிகள்!

இந்தியாவில் கடந்த நான்கைந்து வருடங்களாக தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் என்பது, தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை உச்சரிக்கும் பெயராக இருக்கிறது.

2014-ம்  ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக மற்றும் மோடியை புரமோட் செய்ய, பிரசாந்த் கிஷோரே வியூகங்கள் வகுத்து கொடுத்தார்.

அடுத்து, பீகாரில் நிதிஷ் குமார், ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டி, என பல தலைவர்களுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அவர், தற்போது மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்த பணியை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்றவற்றுக்கு அவர் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அண்மையில், மும்பையில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து, தமிழகத்தில் தமது அரசியல் எதிர்காலம் குறித்து விவாதித்தார் என்றும் தகவல்கள் வெளியாயின.

ஆனால் இதை எல்லாம் கேலி செய்யும் வகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரிடம் பல அரசியல் கட்சிகள் டோக்கன் வாங்கிக்கொண்டு நிற்பது போல கூறி இருந்தார்.

இவை அனைத்தையும் கடந்து, ஒவ்வொரு கட்சியின் அடித்தளத்தையும், அதற்கு எதிரான கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தையும் கொஞ்சம் ஆராய வேண்டியுள்ளது.

2014 ம்  ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமர் ஆனதற்கு முக்கிய காரணம், மக்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீதான எதிர்ப்பு. 2ஜி  விவகாரம், குஜராத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த மோடிக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் போன்றவையும் முக்கிய காரணங்கள்.

பீகாரில் நிதிஷ் குமார் வெற்றிக்கு, அங்கு அவருக்கு நிகரான எதிர் தரப்பு இல்லாதது ஒரு காரணம். ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றதற்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற வலுவான கட்டமைப்பு, சந்திரபாபு நாயுடு மீதான மக்கள் எதிர்ப்பு என்று பல காரணங்கள் இருந்தன.

பொதுவாக ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தவும், வெற்றிக்கான தூரம் அருகாமையில் இருந்தால் அதை எட்டிப்பிடிக்கவுமே, தேர்தல் வியூகங்கள் கைகொடுக்கும்.

ஆனால், வாக்கு வங்கியே இல்லாத நிலையில், அரசியல் சூழல் சரியில்லாத நிலையில் எல்லாம், இந்த தேர்தல் வியூகங்கள் என்ன செய்து விட முடியும்? என்பதும் சிலரது கேள்வியாக உள்ளது.

ஒரு கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது அந்தந்த கட்சிகளுக்கே தெளிவாக தெரியும். ஆதரவு அலை, எதிர்ப்பு அலை எப்போது வீசும் என்பதும் அவர்களுக்கு புரியும்.

இந்த நிலையில், தொண்டர்களின் மனநிலை, பொது மக்களின் மனநிலை ஆகியவற்றை பற்றி அறிய மட்டுமே, இதுபோன்ற தேர்தல் வியூகங்கள், கருத்துக் கணிப்புகள் பயன்படும்.

பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள், ராகுல்காந்திக்கு பயன்தரவில்லை. தமிழகத்தில் அதிமுக, கமலஹாசன் போன்றவர்களுக்கும் பலன் தரவில்லை.

இந்நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், ரஜினி, விஜய் போன்ற நடிகர்களுக்கு, அரசியல் வியூகம் வகுத்துத் தர, பிரசாந்த் கிஷோர் தரப்பு அணுகியதாகவும், அதை அவர்கள் நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி என்ற வலுவான பின்னணி எதுவும் இல்லாமல், பலம் வாய்ந்த  பாஜக, காங்கிரஸ் கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, எந்த அரசியல் நிபுணர் வியூகம் வகுத்துக் கொடுத்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளையும், தொண்டர்களின் உணர்வுகளையும் தெளிவாக அறிந்து, அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை நடைமுறைக்கு ஏற்றார்போல பின்பற்றினாலே வெற்றியை ஈட்டலாம்.

இதை நன்கு அறிந்த மறைந்த அண்ணா, காங்கிரஸ் கட்சியை ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றினார். கலைஞர் அதை தக்கவைத்துக் கொண்டார்.

அதே பாணியில், திமுகவை எம்ஜிஆர் வென்று ஆட்சியை பிடித்தார். ஜெயலலிதா அதை தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால், அவர்களுக்கு பின் வந்தவர்கள், இப்போது தேர்தல் வியூக நிபுணர்களை தேடுவதுதான் ஆச்சர்யமாக உள்ளது.