மாவட்டம் தோறும் அமமுகவை வளைக்கும் திட்டம்: தீவிரம் காட்டும் அதிமுக!

தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் ஒரு கட்சிதான் இருக்க வேண்டும், அதற்கு எதிராக எந்த அணியும் இருக்கக்கூடாது என்பதில், முதல்வர் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

ஆனால், தினகரனின் அமமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை, அதிமுகவுக்கு மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தது.

அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலரை அமமுக திட்டமிட்டு வளைத்து பிடித்து கட்சியில் இணைத்தது.

ஆனால், மக்களவை தேர்தலுக்குப் பின்னர், அதன் நிலை தலை கீழாக மாறியது. அமமுகவில் இருந்த பலர் மீண்டும் தாய் கட்சியான அதிமுகவுக்கு திரும்பினர்.

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலர் திமுகவுக்கு சென்றனர். பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சென்ற சிலர், அடுத்து எங்கு செல்வது என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வளைத்து பிடிக்கும் அசைன்மென்ட், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினகரனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமால், எண்ணற்ற அமமுக தொண்டர்களோடு, கடந்த 5 ம் தேதி அதிமுகவில் இணைந்தார்.

அடுத்த ஆபரேஷன், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அம்முக வன்னியர்களை குறிவைத்து, செம்மலை தனது ஆபரேஷனை தொடங்கி விட்டார்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமமுக கூடாரத்தை கூண்டோடு  கலைத்து, அதிமுகவில் இணைக்க, பெங்களூரு புகழேந்தி மூலம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இணையும் அம்முக தொண்டர்களுக்கு, அவர்களது ஏரியா, சொந்த செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் சீட்டுக்கள் வழங்கவும் அதிமுக தயாராக இருக்கிறது.

இதன் காரணமாக, அம்முக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வளைப்பது, ஒரு சில இடங்களை தவிர, பல இடங்களில் எளிமையாக இருப்பதாகவே, அசைன்மென்ட் கொடுக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஆட்சி, கட்சி, அதிகாரம், கொடி, சின்னம் என அனைத்தும் அதிமுகவிடம் இருக்கும்போது, எங்களை அவர்கள் எதற்காக வளைக்க துடிக்கிறார்கள்? என்று அமமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.