முரசொலியின் மூலப்பத்திரம் கேட்டு 20 நாளாச்சு?  ஸ்டாலினை மீண்டும் சீண்டும் பாமக!

அவரவர் ஆயிரம் படங்களை பார்த்துவிட்டு ஆயிரம் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் அசுரன் என்ற ஒரு படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் இவ்வளவு சிக்கலா? என்ற வகையில் நீண்டுகொண்டு இருக்கிறது முரசொலி – பஞ்சமி விவகாரம்.

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பாராட்டுக்கு, பதில் தெரிவித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முரசொலிக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தால் பாராட்டுக்கள் என்று கூறினார்.

அதையடுத்து, முரசொலி அலுவலகத்தில் பட்டாவை இணைத்து பதில் கூறிய ஸ்டாலின், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல என்று கூறி இருந்தார்.

உடனே, 1960 ம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட முரசொலி இடத்திற்கான ஆவணங்களை விடுத்து,    20 ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்பட்ட பட்டாவை இணைப்பது ஏன்? அதற்கான மூலப்பத்திரம் எங்கே? என்று பாமக சார்பில் பதில் கேள்வி எழுப்பப்பட்டது.

முரசொலி அலுவலகத்திற்கான மூல பத்திரத்தை வெளியிட தயார். அப்படி வெளியிட்டால், ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு ஒதுங்கிக்கொள்ள தயாரா? என்று ஸ்டாலின் மீண்டும் கூறி இருந்தார்.

அதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும், முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ, ஏற்கனவே வெளியிட்டு விட்டார் என்று பொன்னார் கூறினார்.

ஆனால், நான் ஏற்கனவே அவ்வாறு கூறி இருக்கலாம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன் என்று வைகோ, அதில் இருந்து பின்வாங்கினார்.

இந்நிலையில், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? என்பதை விசாரணை செய்யக்கோரி, பாஜக மாநில செயலாளர் சீனுவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார்.

இதையடுத்து, அந்த மனு குறித்த விசாரணைக்காக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், தமிழக தலைமை செயலாளர், வரும் 19 ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ‘நாகர் சேனை – மறு உலகப் பேரரசு’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில், பஞ்சமி விவகாரத்தில், முரசொலி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், முரசொலி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி, திமுகவின் சார்பில் காவல்துறையில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

பஞ்சமி நிலம் தொடர்பாக இவ்வளவு நகர்வுகள் தொடர்ந்து அரங்கேறிய போதிலும், திமுக தலைவர் ஸ்டாலின், முரசொலி அலுவலகம் தொடர்பான மூலப்பத்திரத்தை இதுவரை வெளியிடவில்லை.

உரிய நேரத்தில் உரிய ஆணையத்தில் மூலப்பத்திரம் வழங்கப்படும் என்று மட்டும் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி,  24 மணி நேரத்தில் முரசொலி அலுவலகத்தின் பட்டாவை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், 20  நாட்கள் ஆகியும் இன்னும் மூலப்பத்திரத்தை வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அவர் முரசொலி அலுவலகத்திற்கான மூலப்பத்திரத்தை வெளியிடும் நாளை, தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றும் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.