அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு பின்னடைவு: கடலூர் மாவட்டத்திற்கு மூன்று  செயலாளர்களை நியமித்த அதிமுக!

அதிமுகவை பொறுத்தவரை, அமைச்சர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் இருப்பவர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுகின்றனர்.

ஆனால் அமைச்சர் எம்.சி.சம்பத்தை பொறுத்தவரை, தொடர்ந்து அமைச்சராக இருந்தாலும், அவர் எதிர்ப்பை தமது கட்டுக்குள் கொண்டு வர தவறிவிட்டார்.

அதன் காரணமாக, ஏற்கனவே கடலூர் எம்.பி யாக இருந்த அருண்மொழிதேவன், தற்போதைய பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து எதிர்நிலையிலேயே எடுத்து வருகின்றனர்.

அமைச்சர் கலந்து கொள்ளும் விழாக்களை புறக்கணிப்பது, அமைச்சரை அழைக்காமல் விழாக்கள் நடத்துவது போன்ற சிக்கல்கள் ஏற்கனவே இருந்து வருகின்றன.

ஏற்கனவே, அதிமுகவில் கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு என இருந்த இரண்டு மாவட்டத்திற்கு, அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்.பி.அருண்மொழிதேவன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக இருந்தனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்றாக அதிமுகவில் பிரிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு, சிதம்பரம் எம்.எல்.ஏவான கே.ஏ.பாண்டியன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்திற்கு அருண்மொழிதேவன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளை கொண்ட கடலூர் மத்திய மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு, அதிமுக தலைமைக்கழகத்தின் சார்பில் நேற்று வெளியாகி உள்ளது.

சம்பத்துக்கு எதிர் அணியில் இருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக மாவட்டத்தில் செயல்படுபவர்களுக்கு, மற்ற மாவட்டத்தை சேர்ந்த சில அமைச்சர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அது, வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்று அம்மாவட்ட அதிமுகவினர் கூறுகின்றனர்.