உள்ளாட்சி தேர்தல்: திமுகவை அனுசரித்து செல்லும் முடிவில் கூட்டணி கட்சிகள்!

காங்கிரஸ், இடது சாரிகள் போன்ற கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்காமல் அனுசரித்து செல்லும் மனநிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் கிடைத்த வெற்றி, தேசிய அளவில் அக்கட்சிகளுக்கு ஒரு பலமாக அமைந்துள்ளது.

அதன் காரணமாகவே, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க கூடாது என்று அக்கட்சிகள் நினைக்கின்றன.

திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு இரண்டு மாநகராட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு மாநகராட்சி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மதிமுக, விசிக போன்றவற்றுக்கு மாநகராட்சிகள் ஒதுக்கப்படுவது சந்தேகமே.

அதே சமயம், உள்ளாட்சி தேர்தலில் திமுக 70  சதவிகித இடங்களை வைத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்கு  30 சதவிகித இடங்களை ஒதுக்கும் என்றே கூறப்படுகிறது.

ஆனாலும், திமுகவுக்கு நெருக்கடிகள் கொடுக்காமல், கிடைப்பதை ஏற்றுக்கொண்டு, எந்தவித உரசலும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளதாகவே தெரிகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் எந்தவித பொறுப்பிலும் இல்லாமல் இருக்கிறார்கள்,

அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவே களமிறங்க திட்டமிட்டுள்ளது.