உள்ளாட்சி தேர்தல்: சவாலை சமாளிக்க தயாராகும் எடப்பாடி!

விக்கிரவாண்டி , நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி உற்சாகத்தோடு, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டால், முதல்வர் எடப்பாடி அதிமுகவின் பொது செயலாளராகவே தன்னை பிரகடனப்படுத்திக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சென்னையில் நேற்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் முடிந்த கையேடு, உள்ளாட்சி தேர்தல் வந்தால், ஆட்சி அதிகார தோரணையோடு, அடுத்த சில வருடங்கள் வரை கூட்டணி கட்சிகளை சமாளிக்கலாம்.

ஆனால், சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சற்றேறக்குறைய ஒரு வருடமே இருப்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்லும் நிர்பந்தமே அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது, அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்கள் வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் சிலரோ, இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது நல்லது என்று கூறியுள்ளனர்.

ஆனால், கூட்டணி கட்சிகளையும் சமாளிக்க வேண்டும், உள்கட்சி பூசலும் தலை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது.

மேலும், மாநகராட்சி தொடங்கி, கிராம பஞ்சாயத்து வரை சாலைகள் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருக்கின்றன. இவற்றை சரி செய்ய மத்திய அரசின் உள்ளாட்சி நிதி கண்டிப்பாக கிடைக்க வேண்டுமானால், உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீர வேண்டும்.

அதனால், உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற முடிவில்தான் முதல்வர் இருக்கிறார்.

மத்திய அரசின் தயவு இருந்தால்தான் ஆட்சியை சுமூகமாக நடத்த முடியும். பாமகவின் ஆதரவு இருந்தால்தான் வடமாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கினால்தான், அடிமட்ட தொண்டர்களை திருப்தி படுத்தமுடியும்.

இப்படி, அனைத்து தரப்பையும் திருப்திபடுத்தினால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலை சமாளிக்க முடியும் என்பதால், உள்ளாட்சி தேர்தல் என்பது அதிமுகவுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கிறது.

மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில், பாதிக்கு குறையாமல் கூட்டணி கட்சிகள் கேட்கின்றன. இதில் தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவையும் அடக்கம்.

மறுபக்கம் வாரிசு என்றாலும், அமைச்சர் ஜெயகுமாரின் மகனுக்கு சென்னை மாநகராட்சியை ஒதுக்காமல் இருக்க முடியாது.

சேலம் தமது சொந்த மாவட்டம் என்றாலும், பாமகவை அங்கு பகைத்துக் கொள்ள முடியாது.

பன்னீர் ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுத்து திருப்தி படுத்த வேண்டும். அவர்களை தம் பக்கம் இழுக்க வேண்டும்.

இப்படி பல சவால்கள் முன்னே இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும் சிக்கல், நடத்தாமல் இருந்தாலும் சிக்கல் என்ற நிலையில்தான் அதிமுக இருக்கிறது.

எனினும், முதல்வர் எடப்பாடி, அனைத்தையும் சமாளித்து, ஒரு நல்ல முடிவை எடுப்பார். ஏனெனில் அது அவரது தலைமைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.

அதை சமாளித்தால் மட்டுமே, ஒட்டுமொத்த அதிமுகவை, முதல்வர் தமது கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வர முடியும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.