விக்கிரவாண்டி தோல்வி: திமுக ஆய்வுக்குழுவால் பொன்முடிக்கு நெருக்கடி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்ததை அக்கட்சியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும், மாவட்ட செயலாளரான பொன்முடியின் அணுகுமுறை மீது குற்றம் சொல்லி இருக்கின்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை, மாவட்ட அளவிலான அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தையும் மீறி, பொன்முடியின் முடிவையே வேட்பாளர் தேர்வு தொடங்கி அனைத்திலும் ஸ்டாலின் பின்பற்றினார்.

ஆனாலும், திமுக தோல்வி அடைந்தது. திமுகவின் தோல்வி என்பதைவிட, வெற்றி வித்யாசம்  44 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் இருந்தது, திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆனாலும், வழக்கம்போல, இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும், இதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொன்முடி தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, திமுக தலைமைக்கு வந்து சேர்ந்த தகவல்கள், பொன்முடி மீது அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது என்கின்றனர் அக்கட்சியினர்.

அதே சமயம், யார் என்ன சொன்னாலும், விக்கிரவாண்டி தோல்விக்கு  தொண்டர்கள் சொல்லும் உண்மையான காரணத்தை திமுக தலைமை அறிய வேண்டும் என்று விரும்பியுள்ளது.

இதையடுத்து, திமுக தலைமை கழகத்தில் இருந்து ஆய்வுக்குழு ஒன்று, விக்ரவாண்டிக்கு சென்று, தோல்விக்கான காரணங்கள் குறித்து அடிமட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

இது, மாவட்ட செயலாளர் பொன்முடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், வரும் 10 ம் தேதி சென்னையில் நடக்கும், திமுக ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரச்சினை பெரிதாக பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.