மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி: பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் சிவசேனா!

மகராஷ்டிராவில் பாஜக – சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி பதிமூன்று நாட்களை கடந்தும், ஆட்சி அமையாததால், அங்கு நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் அனைத்துமே பரபரப்பு செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன.

முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்நாவிஸ், அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளார். மறுபக்கம், சிவசேனாவுக்கு ஆதரவு தரும் வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

எனினும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

288  சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகராஷ்டிராவில்  105 இடங்களில் பாஜகவும்,   56  இடங்களில் சிவசேனாவும்,   54 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும்,   44 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதுமான நிலையில், பாஜக – சிவசேனா கூட்டணி  161 இடங்களை தம்வசம் வைத்துள்ளன. எனினும் முதல்வர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா அடம்பிடிப்பதாலும், பாஜக அதை விட்டுக்கொடுக்க மறுப்பதாலும் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

பாஜகவை பொறுத்தவரை, சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க இயலாது. ஆனால், சிவசேனாவை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியும்.

இம்மூன்று கட்சிகளின் உறுப்பினர்களை சேர்த்தால் 154 இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அத்துடன், பாஜகவை ஒதுக்கி வைக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

இப்படி பல அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை இறுதி செய்ய முடியாத சூழலிலேயே அம்மாநில அரசியல் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறது.