ஜி.கே.வாசனை தமிழக பாஜக தலைவராக்க முயற்சி?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு, அதன் தலைவர் ஜி.கே.வாசனை தமிழக பாஜக தலைவராக்க ஒரு முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் மறைந்த மூப்பனார். அவர், 1996-ம் ஆண்டில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் இருந்து வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

அப்போது நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பல இடங்களை வென்றார்.

எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் அதை திறம்பட கொண்டு செல்ல முடியாததால், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, தாய் கட்சியான காங்கிரசில் இணைத்தார்.

மூப்பனாரின் மறைவுக்கு பின்னர், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார் ஜி.கே. வாசன்.

பின்னர், கடந்த 2014 ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரோடு வந்த பலரும், பின்னாளில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், அவர் சார்ந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சீன அதிபருடன் சந்தித்து பேச, சென்னை வந்த மோடியை வரவேற்க சென்ற வாசனை, டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் பிரதமர்.

மோடியை பொறுத்தவரை, கெட்ட பெயர் இல்லாத ஜி.கே.வாசன் போன்றவர்களை முன்னிறுத்தி தமிழகத்தில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வாசனை பொறுத்தவரை, பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை என்றாலும், மக்கள் செல்வாக்கு என்பது கொஞ்சமும் இல்லை. தமது சொந்த சட்டமன்ற  தொகுதியான பாபநாசத்திலும், சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலும் கூட தமது கட்சிக்கு சரியான பின்னணி இல்லாத நிலையில் இருக்கிறார்.

எனினும் அவர் மீது கொண்ட தனிப்பட்ட அன்பு மற்றும் மரியாதையில் அவருக்கு பின்னால் பலர் இருக்கின்றனர். அவர்களுடைய எதிர்காலம் கருதி ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வாசன்.

இந்நிலையில், மோடியின் அழைப்பை ஏற்று நேற்று டெல்லி சென்றுள்ள வாசன், வரும் எட்டாம் தேதி வரை டெல்லியில் இருக்கிறார்.

மோடியை சந்தித்த பின்னர், தாமாக – பாஜக இணைப்பு குறித்து உறுதி செய்யப்பட்டால், அவரே தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, மோடி – வாசன் சந்திப்புக்கு பிறகு, ஒரு தெளிவான ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.