50 ஓவர் ஒருநாள் போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும்: டெண்டுல்கர் யோசனை!

கிரிக்கெட் ஆட்டத்தின் விறுவிறுப்பைக் கூட்ட, 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வந்த பிறகு, ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் குறைய தொடங்கியது.

20  க்கு 20 போட்டிகள் வந்த பின்னர் ஒருநாள் போட்டிக்கான ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியை இரண்டு இன்னிங்க்ஸ்களாக பிரித்து ஆடினால் நன்றாக இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

50  ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியை தலா 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்ஸ்களாகப் பிரிக்க வேண்டும்.

டாஸ் வென்ற அணி, 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை ஆடத் தொடங்க வேண்டும். அதன் பின்னர் எதிரணி விளையாட வேண்டும். இதேபோல் இரண்டாவது இன்னிங்சை விளையாட வேண்டும். முதல் ஐந்து ஓவர்களுக்கு கட்டாயமாக பவர் பிளே அளிக்க வேண்டும்.

இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரிக்கும், விளம்பரதாரர்களும் மகிழ்ச்சி அடைவர் என  சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.