உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வில் சவால்களை சந்திக்கும் நிலையில் அதிமுக!

காலம் முழுவதும் கட்சிக்கு உழைக்கும் தொண்டர்கள் பலருக்கு அந்தந்த பகுதிகளில் உரிய பதவியும்  அங்கீகாரமும் வழங்க வாய்ப்பாக அமைவதுதான் உள்ளாட்சி தேர்தல்.

ஆனால், அதுவே கட்சிக்குள் பல குழப்பத்தையும், நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலும் அமைந்து விடும்.

பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு என்பது, கட்சிகளை கடந்து மக்கள் விரும்பும் பலரையும் பதவியில் அமர்த்தும் வகையிலும் அமையும்.

சிலநேரங்களில், கட்சிக் கட்டுபாடுகளை மீறியும் செயல்பட வேண்டிய நிலைக்கும் உள்ளூர் பிரமுகர்கள் தள்ளப்படுவதும் உண்டு.

ஆனாலும், ஒவ்வொரு கட்சியும் இந்த விஷயத்தில் தங்கள் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்க முடியாது.

அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள், இந்த நேரத்தில் தங்களது கூட்டணி கட்சிகளையும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, அதிமுகவின் ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்து மூச்சு திணறி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், உள்கட்சியில் உள்ளாட்சி பொறுப்பாளர்களை தேர்வு செய்வதிலும் அக்கட்சி பெரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, ஒன்றிய செயலாளர்களுடன் இணைந்து, மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி வேட்பாளர்களின் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்த பட்டியலை ஆய்வு செய்த பின்னர், தலைமை இறுதியாக அறிவிப்பை வெளியிடும்.

மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பொறுப்புக்களை ஜெயலலிதாவே நேரடியாக முடிவு செய்து அறிவிப்பார். அவர் எதை அறிவித்தாலும், அதற்கு எதிராக பேச முன்வரும் அளவுக்கு கட்சியில் யாருக்கும் தைரியம் இருக்காது.

ஆனால், தற்போது அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு இடையே கடும் பூசல்கள் இருக்கின்றன.

அதனால், உள்ளாட்சி அமைப்புகளின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குள் அதிமுக அடிமட்ட நிலை வரையில் பல நெருக்கடிகளை கடந்து வர வேண்டிய நிலையில் உள்ளது.

எனவே, உள்ளாட்சி தேர்தல் என்பது, இப்போதுள்ள அதிமுக தலைமைக்கு மிகப்பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வருவது எப்படி? என்பது குறித்தே தலைமை இப்போது யோசித்து வருகிறது.